அரசாங்கம் வருமானத்தை அதிகரிக்க வேண்டிய பாரிய சவால்களுக்கு முகம்கொடுத்துள்ளது – நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!

Wednesday, October 5th, 2022

அரச ஊழியர்களின் சம்பளத்தை குறைப்பது தொடர்பில் எத்தகைய தீர்மானத்தையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் இது தொடர்பான தகவல்கள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என்றும் அமைச்சர் சபையில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம் பெற்ற ஏற்றுமதி, இறக்குமதி வரிகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

விவாதத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் –

அரச ஊழியர்களுக்கு இந்த மாதம் ஒருபகுதி சம்பளமே வழங்கப்படும் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இது முற்றிலும் தவறானது. 

நாட்டில் 30 இலட்சம் வரையிலான குடும்பங்கள் நிவாரணங்களை எதிர்பார்த்திருக்கின்றன. அதேபோன்று நிலையான சம்பளமொன்றுக்குள் காணப்படும் அரச ஊழியர்களின் குடும்பங்களும் உணவு பண வீக்கம் அதிகரிக்கும் போது பாதிக்கப்படுகின்றனர்.

இத்தகைய பின்னணியில் சமூக வலைத்தளங்கள் வெளியிடும் செய்திகளில் எத்தகைய உண்மையும் கிடையாது. இதேவேளை அது தொடர்பில் அரசாங்கம் எந்தவித தீர்மானங்களையும் மேற்கொள்ளவில்லை.

அரசாங்கம் 93 பில்லியன் ரூபாவை மாதாந்தம் சம்பளத்திற்காக ஒதுக்குகின்றது. ஓய்வூதியத்திற்காக 21 பில்லியன் ரூபா ஒதுக்கப்படுகிறது. எனினும் எந்த கட்டத்திலும் அரச ஊழியர்களின் சம்பளத்தை குறைப்பதற்கு தீர்மானிக்கப்படவில்லை.  அரச சேவையை பாதுகாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் உள்ளது.

அரசாங்கம் வருமானத்தை அதிகரிக்க வேண்டிய பாரிய சவால்களுக்கு முகம்கொடுத்துள்ளது. அதன்படி முறையாக வருமானத்தை அதிகரிக்க வேண்டும். முடிந்தளவுக்கு குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு சுமையின்றி அதனை முகாமைத்துவம் செய்வதற்கே அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: