அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை – வடமாகாணத்திற்கு 100 மெற்றிக் தொன் சீனியை அனுப்புவதற்கு அமைச்சர் நளின் பெர்னாண்டோ உடனடி ஏற்பாடு!

Tuesday, December 5th, 2023

வடமாகாணத்தில் அண்மைக்காலமாக சீனிக்கான பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நிவர்த்தி செய்யும் வகையில் 100 மெற்றிக் தொன் சீனியை அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வடமாகாணத்தில் விநியோகிப்பதற்கு போதுமான சீனி இல்லை என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கூட்டுறவு சங்கங்கள் சுட்டிக்காட்டியிருந்தன.

இந்தநிலையில், அமைச்சர்களான நளின் பெர்னாண்டோ மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த சீனி இருப்பு வடமாகாணத்தில் உள்ள 48 கூட்டுறவு சங்கங்களின் ஊடாக மக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை, இந்தியாவின் நாகப்பட்டினத்திலிருந்து சீனி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை யாழ் மாவட்டத்திற்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கூட்டுறவு சங்கங்கங்களின் ஆணையாளர்கள், தலைவர்கள், சங்க பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கொண்டுவரப்படும் சீனியை 280 ரூபாவிற்கு மேற்படாது விலையில் விற்பனை செய்யப்பட வேண்டுமென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, எதிர்வரும் தைப்பொங்கலைத் தொடர்ந்து நாகப்பட்டினத்திலிருந்து சரக்கு கப்பல் வருவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு சரக்கு கப்பல் வரும் நிலையில் செலவு குறைவடைவதன் காரணமாக விலையில் மாற்றம் ஏற்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

கிளிநொச்சி உட்பட வடக்கின் பல பகுதிகளுக்கு நீர் வசதி விரைவில் கிட்டும் - டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத...
வழிகாட்டியாக மட்டுமன்றி எமது பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுத்தரக் கூடியவராக இருக்கும் தலைவர் டக்...
எமது ஆட்சியில் வழங்கிய மாகாண சபைத் தேர்தல் உரிமையைக் கூட நல்லாட்சி அரசாங்கம் பாதுகாக்கவில்லை - இராஜா...