அனைத்து மாணவர்களும் மகிழ்ச்சியாக கல்வி கற்கக்கூடிய பாடசாலை சூழலை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!
Thursday, December 22nd, 2022
அடுத்த வருடம் மார்ச் முதல் பகுதியிலிருந்து ஆரம்பமாகும் 2023 ஆம் கல்வியாண்டில் ஆரம்ப பிரிவுக்கு தவணை பரீட்சை நடத்தப்படமாட்டாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
தவணை பரீட்சைகளுக்கு பதிலாக ஒவ்வொரு பாடத்திற்கும் நடத்தப்படும் கணிப்பீட்டு புள்ளிகளுக்கு அமைய புள்ளி வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, எதிர்காலத்தில் தேவையான மாற்றங்களை ஏற்படுத்தி, பாடசாலைகளில் இருந்து வெளியேறும் மாணவர்களை பல்கலைக்கழங்களுக்கோ அல்லது திறமையின் அடிப்படையில் தொழிநுட்ப கல்லூரிகளுக்கோ உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
எதிர்காலத்தில் பாடசாலையை விட்டு வெளியேறும் மாணவர்களுக்கு அவர்களின் திறமை மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் பல்கலைக்கழக நுழைவு அல்லது தொழில்நுட்பக் கல்லூரிகள் ஊடாக மேலதிக பயிற்சி,கல்வி வாய்ப்புகளை வழங்குவதற்கு தேவையான மாற்றங்கள் செய்து வேலைத்திட்டம் தயாரிக்கப்படும். விடுமுறை நாட்களை குறைத்து அதிகளவில் வேலை செய்வதன் மூலம் அனைத்துப் பாடத்திட்டங்களும் உள்ளடக்கப்பட்டு எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் பாடசாலைக் கல்வி நடவடிக்கைகள் மீளமைக்கப்படும்.
தேவையான சீருடைகள், பாடப்புத்தகங்கள், உடற்பயிற்சி புத்தகங்கள், உள்ளிட்ட பாடசாலை உபகரணங்கள் வழங்குவது சிரமமானதாக இருந்தாலும் குறித்த நேரத்தில் அவை மாணவர்களுக்கு வழங்கப்படும். மேலும் மாணவர்கள் மத்தியில் ஒழுக்கம் மிகவும் முக்கியமானது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|
|


