அனைத்து அரச மற்றும் தனியார் துறைகளையும் உள்ளடக்கி நிலையான பொருளாதாரக் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்படும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச அறிவிப்பு!

Saturday, December 11th, 2021

தற்கால மற்றும் எதிர்கால சவால்களுக்கு முகம்கொடுக்கக் கூடியவகையில் அனைத்து அரச மற்றும் தனியார் துறைகளையும் உள்ளடக்கி நிலையான பொருளாதாரக் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

2022 வரவு – செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்ட அமுலாக்க அமைச்சு பொருளாதார மறுமலர்ச்சிக்கான தொடர்புடைய கொள்கைகளை உள்ளடக்கும். இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவும், நிலையான அபிவிருத்திச் சபையும் இது தொடர்பில் பொறுப்பான பணியை நிறைவேற்றுவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

இதேநேரம் அனைத்துக் கொள்கைகளும் துல்லியமான தரவுகளின் அடிப்படையில் வகுக்கப்பட வேண்டும். மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களமும் இந்த விடயத்தில் பெரும் பொறுப்பை நிறைவேற்றுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

2022 ஆம் ஆண்டு நிறைவேற்றப்படவுள்ள விவசாயிகள் மற்றும் வீடமைப்பு அபிவிருத்தித் திட்டத்தை 2023 ஆம் ஆண்டளவில் நிறைவு செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதாரம் திட்டமிட்ட மற்றும் ஆக்கபூர்வமான முறையில் முன்னேறும் என அரசாங்கம் நம்புவதாகவும் பிரதமர் இதன் போது தெரிவித்துள்ளார்.

இதேவேளை அரச துறையில் நிதி அற்ற வளங்களை முகாமைத்துவம் செய்தல் மற்றும் அதனை பயனுள்ள விதத்தில் உபயோகிப்பதற்கான கொள்கை ரீதியான தீர்மானத்தை மேற்கொள்வதற்கு கட்டுப்பாட்டாளர் நாயகம் அலுவலகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் அழுத்தங்களை ஏற்படுத்தும் உபாய அபிவிருத்தி திட்டம் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது நிதியமைச்சு மற்றும் முதலீட்டு சபை ஆகியவற்றுடன் நெருக்கமாக செயற்படுவதற்கும் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேற்படி பொருளாதார கொள்கையானது நடைமுறை மற்றும் எதிர்கால சவால்களை எதிர்கொள்ளக்கூடிய வகையில் பொருளாதார, சமூக மற்றும் சுற்றாடல் உள்ளிட்ட விடயங்களை கவனத்தில் கொண்டு நிலையான கொள்கையாக அமைய வேண்டும்.

தற்போது நிலவும் கொரோனா வைரஸ் பாதிப்பினால் சர்வதேச நாடுகளைப் போன்றே இலங்கையும் பொருளாதார அபிவிருத்தியில் பலவீனமான நிலையை கடந்து வந்துள்ளது. அந்த சவாலை வெற்றி கொண்டு நிலையான அபிவிருத்தி மறுசீரமைப்பு மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதற்காக அனைத்து பிரிவுகளையும் இணைத்துக் கொண்டு குறுகியகால, நடுத்தர மற்றும் நீண்ட கால திட்டங்களை தயாரிப்பதற்கு தேசிய திட்டமிடல் திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

எனவே எதிர்வரும் வருடங்களில் கொரோனா தொற்று நிலைமை முடிவடைந்து, எமது பொருளாதாரம் திட்டமிடப்பட்ட பிரகாரம் மற்றும் செயற்திறமையுடன் முன்னுக்கு செல்லும் என நாங்கள் நம்புகின்றோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: