அத்துமீறும் கடற்றொலிலால் எமது தொழில்துறைகள் பாதிப்பு -அமைச்சின் செயலாளரிடம் கடற்றொழிலாளர்கள் எடுத்துரைப்பு!

Friday, July 14th, 2017

தடைசெய்யப்பட்ட தொழில்த்துறைகளை உள்ளூர் மற்றும் வெளியூர் கடற்றொழிலாளர்கள் மேற்கொள்வதனால் தாம் நாளாந்தம் பல்வேறுபட்ட இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து வருவதாக வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

கடற்றொழில் நீர்வளத்துறை அமைச்சின் செயலாளர் மங்கலிக்கா அதிகாரி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரிடமே கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் இவ்வாறு தெரிவித்திருந்தனர்.

தடைசெய்யப்பட்டதாக கூறப்படும் றோலர் மீன்பிடி, சுருக்குவலை, டைனமற் முறையிலான தொழில் நடவடிக்கைகள் என அரசு அறிவித்துள்ளபோதிலும் அத்தொழில் நடவடிக்கைகளை தமது கடற்பரப்பில் மேற்கொள்ளப்படுவதனால் தாம் பாரிய இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருவதாக தெரிவித்தனர்.

நாளாந்தம் சுமார் 200 முதல் 250க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் படகுகள் சகிதம் தமது கடல் எல்லைக்குள் வந்து குறித்த தொழில்துறை நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாகவும் சுட்டிக்காட்டினர்.

இவ்வாறு அத்துமீறி தமது கடற்பகுதிக்குள் வரும் கடற்றொழிலாளர்களிடம் சென்று கலந்துரையாடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்ட போது அவர்கள் தம்மை தாக்க வருவதாகவும் தெரிவித்திருந்தனர்.

தடைசெயப்பட்டதும் அத்துமீறியதுமான குறித்த தொழில்துறைகளை தடுத்துநிறுத்துமாறு தம்மால் பலமுறை கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும் தமது கோரிக்கைகள் தொடர்பில் துறைசார்ந்தவர்கள் எவ்விதமான நடவடிக்கைகளையும் எடுக்க முன்வராமை தமக்கு மிகுந்த வேதனையை தருவதாகவும் கடற்றொழிலாளர்கள் கவலை தெரிவித்தனர்.

Related posts: