அத்தியாவசிய உணவுப்பொருட்களை விநியோகிப்பதற்கான அவசரகால விதிமுறைகள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதியால் வெளியீடு!

Tuesday, August 31st, 2021

அத்தியாவசி உணவுப்பொருட்கள் விநியோகம் தொடர்பாக அவசரகால விதிமுறைகளை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார். கடந்த நள்ளிரவுமுதல் நடைமுறைக்கு வரும் வகையில் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் ஜனாதிபதி இதனை அறிவித்துள்ளார்.

இந்நிலையில் உணவுவிநியோகம் தொடர்பான அவசரகால ஒழுங்குமுறைகள் கடந்த இரவுமுதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

நெல், அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை பதுக்கிவைப்பதையும் இவற்றின் விலைகளை அதிகரிப்பதையும் தடுக்கும் நோக்கத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 2 ஆவது பிரிவின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், அக்கட்டளைச் சட்டத்தின் ii ஆவது பிரிவின் ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்தி, 5 ஆவது பிரிவின் ஏற்பாடுகளின் பிரகாரம் தயாரிக்கப்பட்டுள்ள அத்தியாவசிய உணவு விநியோகத்துடன் சம்பந்தப்பட்ட அவசரகால விதிமுறைகள், கடந்த நள்ளிரவுமுதல் நடைமுறைக்கு வரும் வகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

நெல், அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை மொத்தமாகப் பதுக்குதல், அதிக விலைக்கு விற்றல் ஆகியவற்றின் மூலம் நுகர்வோரை அசௌகரியத்துக்கு உள்ளாக்கும் சந்தை முறைகேடுகளைத் தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, அரசாங்கத்தின் உத்தரவாத விலைக்கு அல்லது சுங்கத்தில் இறக்குமதி செய்யப்பட்ட விலையை அடிப்படையாகக் கொண்டு நெல், அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை மொத்தமாகக் கொள்வனவு செய்து மக்களுக்கு நியாயமான விலைக்கு  வழங்குவதற்கு, அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதற்கும், அரச வங்கிகளின் மூலம் மொத்தமாகக் கொள்வனவு செய்வதற்கு வழங்கப்பட்டுள்ள கடனை, கடன் பெற்றுக்கொண்டவர்களிடம் இருந்து அறவிடப்படக்கூடிய வகையில் இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

இதேவேளை, சாதாரண பொதுமக்களின் வாழ்க்கை நிலையை இயல்பு நிலையில் பேணுவதற்குத் தேவையான நெல், அரிசி, சீனி உள்ளிட்ட ஏனைய நுகர்வுப் பொருட்களை விநியோகிப்பதை ஒருங்கிணைப்புச் செய்வதற்காக, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகமாக, மேஜர் ஜெனரல் எம்.டீ.எஸ்.பி.நிவுன்ஹெல்ல நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: