அதிபர் சேவை தரம் மூன்று – புதிய போட்டி பரீட்சைகள் மற்றும் நேர்முகத் தேர்வுகளை நடத்துவதற்கு தீர்மானம் – உயர்நீதிமன்றுக்கு அறியப்படுத்தினார் சட்டமா அதிபர்!

Saturday, August 5th, 2023

இலங்கை அதிபர் சேவை தரம் மூன்றில் நிலவும் வெற்றிடத்தை நிரப்புவதற்காக புதிய போட்டி பரீட்சைகள் மற்றும் நேர்முகத் தேர்வுகளை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் உயர்நீதிமன்றுக்கு அறியப்படுத்தியுள்ளார்.

இலங்கை அதிபர் சேவை தரம் மூன்றிற்கு புதிய நியமனங்களை வழங்குவது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சில அடிப்படை உரிமை மனுக்கள் நேற்றைய தினம் உயர் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையில் ஜனக்க டி சில்வா மற்றும் ஷிரான் குணரத்ன ஆகிய நீதியரசர்கள் அடங்கிய ஆயம் முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

இதன்போது சட்டமா அதிபர் சார்பில் மன்றில் முன்னிலையான பிரதி மன்றாடியர் நாயகம் நிர்மலன் விக்னேஸ்வரன் இந்த விடயத்தை மன்றுரைத்துள்ளார்.

அத்துடன் குறித்த மனுக்கள் தொடர்பில் சமாதான யோசனையை முன்வைக்க முடியும் எனவும் பிரதி மன்றாடியர் நாயகம் தெரிவித்தார்.

இதற்கமைய அதிபர் சேவை மூன்றாம் தரத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான புதிய விண்ணப்பங்கள் கோரப்பட்டு பரீட்சை மற்றும் நேர்முகத் தேர்வுகளை நடத்தி உரிய நியமனங்களை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அடுத்து ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் பரீட்சைகளை நடத்த முடியும் எனவும் உரிய விடைத்தாள் மதிப்பீடுகள் செய்யப்பட்ட பின்னர் எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்துக்குள் நேர்முகத் தேர்வுகளை நடத்த முடியும் எனவும் பிரதி மன்றாடியர் நாயகம் உயர்நீதிமன்றுக்கு அறியப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: