அதிபர் இன்மையால் கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு – பெற்றோர்கள் கவலை தெரிவிப்பு!

Thursday, January 17th, 2019

யாழ்ப்பாணம் மிருசுவில் உசன் இராமநாதன் மகாவித்தியாலயத்தில் கடந்த ஒரு வருடமாக அதிபர் இன்மையால் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் கவலை தெரிவித்தனர்.

வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றிய த.சோதிலிங்கம் எழுதுமட்டுவாழ் கணேசா வித்தியாலயத்துக்கு கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து பிரதி அதிபரின் நிர்வாகத்தில் கற்பித்தல் செயற்பாடுகள் நடைபெறுகின்றன. நிரந்தர அதிபர் இல்லாததால் பாடசாலை அபிவிருத்தி வேலைகளும் தாமதமடைவதாகவும் தெரிவித்தனர்.

அத்துடன் வித்தியாலய வளாகத்தில் வகுப்பறைத் தொகுதி அமைக்கப்பட்டு வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டு நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்ட நிலையில் அதிபர் இன்மையால் அதனைத் திறந்து மாணவர்களின் கற்றல் செயற்பாட்டுக்கு வழங்கப்படவில்லையெனவும் தெரிவித்தனர்.

பாடசாலை வகை 11 ஐச் சேர்ந்த இவ்வித்தியாலயத்துக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டு நேர்முகப் பரீட்சையும் நடத்தப்பட்டு ஆறு மாதங்களாகியும் அதிபரை நியமிக்கவில்லையெனவும் பெற்றோர்கள் தெரிவித்தனர்.

மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் மாகாணக் கல்வித் திணைக்களமோ, வலயக்கல்வி அலுவலகமோ அக்கறை செலுத்தி குறித்த பாடசாலைக்கான அதிபரை நியமிக்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.

Related posts: