அதிகாரமளிக்கபட்ட கடன்பெறுகை எல்லைக்குள் தேவையான நிதி வழங்க நிபந்தனையுடன் திறைசேரி செயலாளருக்கு அதிகாரம் – அமைச்சரவையும் ஒப்புதல்!

Wednesday, February 22nd, 2023

அதிகாரமளிக்கபட்ட கடன்பெறுகை எல்லைக்குள் தேவையான நிதியை வழங்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, திறைசேரி செயலாளருக்கு அதிகாரமளிப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

2022ஆம் ஆண்டின் 43ஆம் இலக்க ஒதுக்கீட்டு சட்டத்தின் மூலம் 2023 நிதியாண்டுக்கான 4,979 பில்லியன் ரூபாய்களை விஞ்சாத கடன் பெறுகைக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய குறித்த கடன் பெறுகைக்கான எல்லை நிதியாண்டில் கடன்களை மீளச் செலுத்தல், வட்டி செலுத்தல் மற்றும் அபிவிருத்திக் கருத்திட்டங்களுக்கான நிதியொதுக்கீடுகள் மீளவும் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.

நிதியாண்டுக்கான மொத்தக் கடன் பெறுகைகளை 4,979 பில்லியன் ரூபாய்கள் விஞ்சாத உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மூலங்களிலிருந்து பெற்றுக் கொள்வதுடன், உள்ளூர் மூலங்களிலிருந்து 3, 526 பில்லியன் ரூபாய்கள் மற்றும் வெளிநாட்டு மூலங்களிலிருந்து 1,453 பில்லியன் ரூபாய்களையும் பெற்றுக் கொள்வதற்கு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

உள்ளூர் மூலங்களின் கீழ் திறைசேரி முறிகள், திறைசேரி பிணையங்கள், வங்கி வெளிநாட்டு நாணய அலகுக் கடன்கள் மற்றும் இலங்கை அபிவிருத்திப் பிணையங்கள் மூலம் தேவையான கடன் தொகைகள் பெற்றுக்கொள்ளப்படும்.

2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இலங்கை அரசு வெளிநாட்டு கடன் சேவைகள் தொடர்பாக வெளியிட்டுள்ள கொள்கைக்கு அமைய 2023 நிதியாண்டில் முதல் 6 மாதங்களில் வெளிநாட்டு நாணயத்தில் செலுத்த வேண்டிய மொத்தக் கடன் 2,609 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

அதில் 2,069 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு கடன் தவணையை செலுத்துவதற்கும், 540 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வட்டியை செலுத்துவதற்குமாகும்.

வெளிநாட்டு நாணயத்தில் செலுத்த வேண்டிய கடன் சேவைச் செலுத்தல்களில் 709 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கை அபிவிருத்தி பிணையக் கடன் மற்றும் அதற்கான வட்டியாக 46 மில்லியன் அமெரிக்க டொலர்களும் உள்ளடங்குகின்றது.

அதற்கமைய, அதிகாரமளிக்கபட்ட கடன்பெறுகை எல்லைக்குள் தேவையான நிதியை வழங்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக திறைசேரி செயலாருக்கு அதிகாரமளிப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: