அதிகரித்த வட்டி வீதம் : அரச உத்தியோகத்தர்கள் பாதிப்பு!

Wednesday, July 3rd, 2019

யுத்தத்தின் மூலம் அழிக்கப்பட்ட தமது வீடுகளை மீள அமைப்பதற்காகவும், திருத்தியமைப்பதற்காகவும் வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட கடன் சுமைகளால் கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பல அரச உத்தியோகத்தர்கள் அவதிப்படுவதாக விசனம் தெரிவித்துள்ளனர்.

மேற்படி யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த அரச உத்தியோகத்தர்களான ஆசிரியர்கள் உள்ளிட்ட அரச உத்தியோகத்தர்கள் மீள்குடியேற்றப்பட்டதன் பின்னரான பகுதிகளில் அவர்களுக்கான வீட்டுத்திட்டங்கள் வழங்கப்படாதமையால் யுத்தத்தால் அழிக்கப்பட்ட தமது வீடுகளை புதிதாக அமைப்பதற்காகவும், சேதமடைந்த தமது வீடுகளைத் திருத்தியமைப்பதற்காகவும், பாதிக்கப்பட்ட அரச உத்தியோகத்தர் பலர் வங்கிகளிடமிருந்து வீடமைப்பதற்கான கடன்களைப் பெற்றுள்ளனர்.

இதனை விட பின்னைய காலங்களில் வீட்டுத்திட்டங்கள் கிடைக்கப்பெற்றவர்களும் அவ்வீடுகளை முழுமைப்படுத்துவதற்கு நிதி போதாமையால் வங்கிகளிடமிருந்து கடன்களைப் பெறவேண்டிய நிலையே ஏற்பட்டிருந்தது.

வீடமைப்பதற்காக வங்கிகளிடமிருந்து 10 இலட்சம், 15 இலட்சம் ரூபாவை வீடமைப்புக் கடனாகப் அரச உத்தியோகத்தர்கள் பெற்றுள்ளனர்.

அதாவது வீடமைப்பு வங்கிக் கடன் பெற்ற அரச உத்தியோகத்தர்கள் அதிகரித்த வட்டி வீதத்தினால் சம்பளப் பணத்தை அப்படியே வங்கிக் கடனுக்கான மாதாந்தக் கட்டுப் பணமாகச் செலுத்திவிட்டுச் செல்வதாகவும், அரசாங்கம் ஒரு கையால் மாதச் சம்பளமாக வழங்கி மறுகையால் அதிகரித்த வட்டியுடன் அப்படியே திருப்பிப் பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளான கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் வீடமைப்புக்கான வங்கிக் கடன்களைப் பெற்று அவதிப்படும் அரச உத்தியோகத்தர்களது அவல நிலையினைக் கருத்திற்கொண்டு அவர்களது கடன்களின் வட்டி வீதத்தினைக் குறைப்பதற்கோ அல்லது வட்டியற்ற கடன்களாக மாற்றியமைப்பதற்கோ இம்மாவட்டங்களின் மக்கள் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்தவர்கள் உரிய கவனம் செலுத்தி உதவ முன்வர வேண்டும் என்பது பாதிக்கப்பட்டவர்களது கோரிக்கையாகும்.

இவ்விடயத்தில் அரச உத்தியோத்தர்களுக்காகக் குரல் கொடுக்கும் தொழிற் சங்கங்களும் உரிய கவனம் செலுத்தி உரிய தரப்பினருடன் தகுந்த முறையில் அணுகி பாதிக்கப்பட்டவர்களது பிரச்சினையை விரைந்து தீர்க்க முன்வர வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

Related posts: