அடுத்த 3 வாரங்களில் டெல்டா தொற்று மோசமடைய வாய்ப்பு – மக்களின் பொறுப்பற்ற நடமாட்டத்தைத் தடுக்க காத்திரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைத்தியர்கள் வலியுறுத்து!

Monday, August 9th, 2021

நாட்டில் கொரோனாவின் டெல்டா திரிபடைந்த தொற்று அடுத்து வரும் 3 வாரங்களில் மோசமடையலாம் என வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர்.

அத்துடன் டெல்டா திரிபுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கை போராட்டம், நாட்டின் சுகாதார கட்டமைப்பையும் தொற்றாளர்கள் நிறைந்து வழியும் வைத்தியசாலைகளையும் சோர்வடையச் செய்துள்ளதாக வைத்தியர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அதேநேரம் இது வெறும் ஆரம்பக்கட்டத்தில் இருப்பதாகவும் இன்னும் மூன்று வாரங்களில் நிலைமை மேலும் மோசமடையக்கூடும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இதனிடையே அடுத்துவரும் வாரங்களில் கொரோனா தொற்றினால் மரணங்கள் அதிகரிக்கக்கூடும் என அச்சம் வெளியிட்டுள்ள வைத்தியர்கள், ஏனைய நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் வைத்திசாலைகளுக்கு செல்ல அஞ்சுவதால் மரணங்கள் மேலும் அதிகரிக்கலாம் எனவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

தற்போது ஒக்சிசன் தேவைப்படும் சகல நோயாளர்களுக்கும் அதனை வழங்குவதற்கான செயற்பாடுகள் சமாளிக்கப்படுகின்ற போதிலும் ஒக்சிசனுக்கு தட்டுப்பாடு ஏற்படுமேயானால் இறப்புகளைத் தவிர்க்க முடியாமல் போகலாம் எனவும் வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள பிரதான வைத்தியசாலைகளில் போதுமான கட்டில்கள் இல்லாததால் அடுத்துவரும் வாரங்களில் கொரோனா தொற்றினால் நாளாந்தம் 200 மரணங்கள் சம்பவிக்கக்கூடும் எனவும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளாந்தம் 5 ஆயிரத்தை எட்டக்கூடும் எனவும் வைத்தியர்கள் கணிப்பிடுகின்றனர்.

இது இவ்வாறிருக்க, உடனடியாக மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் டெல்டா திரிபு அடுத்த மூன்று அல்லது நான்கு வாரங்களில் உச்சக்கட்டத்தை அடைந்து அழிவை ஏற்படுத்தும் என இரஜரட்ட பல்கலைக்கழகத்தின் சமூக மருத்துவத்துறை விரிவுரையாளர் பேராசிரியர் சுனேத் அகம்போதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த நிலைமை நீடித்தால் ஏற்கனவே நெருக்கடியை எதிர்கொண்டுள்ள சுகாதார சேவை சரிந்துவிழக்கூடும் என மற்றும் சில வைத்திய நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இலங்கையில் இதற்கு முன்னர் ஏற்பட்ட கொரோனா தொற்று அலைகளுக்கு எதிராக  களநிலைகளிலேயே போராட வேண்டியிருந்தது. ஆனால். தற்போதைய போராட்டம் வைத்திசாலைகளுக்கு நகர்ந்து பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது எனவும் பேராசிரியர் அகம்போதி சுட்டிக்காட்டியுள்ளார்..

அத்துடன் சுகாதார சேவைகளில் பணியாற்றுபவர்கள் மத்தியிலும் கொரோனா தொற்று பரவுவதால் நிலைமையை மேலும் மோசமடையச் செய்துள்ளது.

தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் இரத்தினபுரி பொது வைத்தியசாலை, கராபிட்டிய போதனா வைத்தியசாலை ஆகியவற்றில் கடந்த வாரம் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இலங்கை வைத்தியத்துறையில் இது  அபூர்வமான நிகழ்வாக பதிவாகியுள்ளது.

இந்நிலையில் தொற்று நோயாளர்களினது எண்ணிக்கையும் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துச் செல்லும் நிலையில் டெல்டா திரிபு பரவுவதற்கு முக்கிய காரணமாக இருக்கும் மக்களின் பொறுப்பற்ற நடமாட்டத்தைத் தடுக்கும் காத்திரமான கொள்கைகளை அமுல்படுத்த வேண்டும் எனவும் அரசாங்கத்தை வைத்தியர்கள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.. 

000

Related posts: