அடிப்படை தேவைகளை தெரிவிப்பதற்கான சந்தர்ப்பத்தை பெண்களுக்கு வழங்க வேண்டும். – யாழ் பல்கலைக்கழகத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு!

Thursday, March 28th, 2024

வடக்கு மாகாணத்தில் மாத்திரமின்றி நாடளாவிய ரீதியில் பெண்கள் நாளாந்தம் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வருவதாக வடக்கு மாகாணஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கான உரிமைகள் தொடர்பில் குரல் எழுப்ப முன்னர், தமது அடிப்படை தேவைகளை தயக்கமின்றி தெரிவிப்பதற்கும், அதற்கான உதவிகளை பெற்றுக்கொள்வதற்கும் பெண்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என ஆளுநர் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மகளிர் தின நிகழ்வு, மருத்துவ பீடத்தின் கேட்போர் கூடத்தில் இன்று நேற்று ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அத்துடன் அரசியலிலும் பெண்களின் பங்கேற்பை அதிகரிக்க வேண்டும் என ஆளுநர் கூறினார். பெண்களின் உரிமைகளை வென்றெடுக்கவும், அவர்களுக்கு தேவையான சட்ட திருத்தங்களை மேற்கொள்வதற்கும், புதிய சட்டங்களை உருவாக்குவதற்கும் நாடாளுமன்றத்தில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் என ஆளுநர் தெரிவித்தார்.

அத்துடன், பாதிக்கப்படும் பெண்ணொருவரை ஆற்றுப்படுத்தும் செயற்பாடுகள் அவசியம் எனவும், அவ்வாறானவர்களின் எதிர்காலம் தொடர்பில் சிந்தித்து செயற்பட வேண்டும் எனவும் கௌரவ ஆளுநர் தெரிவித்தார். பெண்மையை போற்றி, அவர்களின் மகத்துவத்தை மதிக்கின்ற நாடாக இலங்கை மாற வேண்டும் எனவும், இந்த விடயங்கள் சாத்தியபாடற்று போனால் மகளிர் தினம் கொண்டாடுவதில் பலன் இல்லை எனவும் கௌரவ ஆளுநர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: