அடிப்படை சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி சகலரும் பொறுப்புடன் செயற்பட்டால் மீண்டும் ஒரு முடக்க நிலையை தவிர்க் முடியும் – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வலியுறுத்து!

Saturday, July 31st, 2021

நாட்டில் தற்போது மீண்டும் நாளாந்தம் இனங்காணப்படும் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் நாட்டை முடக்கினால் மாத்திரமே தொற்று பரவல் தீவிரமடைவதைத் தடுக்க முடியும் என்றால், நிச்சயம் மீண்டும் முடக்கத்திற்கு செல்ல வேண்டியேற்படும்.

ஆனால் கொரோனா வைரஸ் பரவலுக்கு அஞ்சி பின்வாங்காமல் அடிப்படை சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி சகலரும் பொறுப்புடன் செயற்பட்டால் இந்த நிலைமையிலிருந்து மீள முடியும் என்றும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில் – நாட்டில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் காணப்பட்டதைப் போன்று கொவிட் பரவலில் கணிசமானளவு அதிரிப்பை இவ்வாரத்தில் அவதானிக்க முடிகிறது.

தற்போது பல பிரதேசங்களிலும் டெல்டா தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ள நிலையில் , கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பில் டெல்டா தாக்கம் செலுத்தக் கூடும் என்று சுகாதார தரப்பு தெரிவித்துள்ளது.

அதேநேரம் தற்போது தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளமைக்கான காரணம் டெல்டா வைரஸ் என்று உறுதிப்படுத்தப்படவில்லை.

அவ்வாறு கூறுவது கடினமாகும். காரணம் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட சகலருக்கும் டெல்டா தொற்று காணப்படுகிறதா என்பதை இனங்காண்பதற்கான மரபணுவின் ஒழுங்கமைப்பை அறியும் பரிசோதனை செய்வது நடைமுறை சாத்தியமற்றது.

எவ்வாறிருப்பினும் தற்போது வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் தொற்றாளர்களில் பெருமளவானோருக்கு தீவிரமான சிகிச்சை அறிகுறிகள் காணப்படுவதோடு, ஒட்சிசன் தேவையுடையோராகவும் உள்ளனர். எனவே கொவிட் பாதிப்புக்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு ஒவ்வொருவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: