அடிப்படைவாதமும் பயங்கரவாதமும் தலைதூக்க எமது அரசாங்கம் இடமளிக்காது – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச உறுதி!

Sunday, March 7th, 2021

தமிழ் அடிப்படைவாத, பிரிவினைவாத பயங்கரவாதமும் இஸ்லாம் மதவாத அடிப்படைவாதமும் தலைதூக்க தமது அரசாங்கம் இடமளிக்காது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கிராமத்துடன் கலந்துரையாடல் வேலைத்திட்டத்தின் மற்றொரு கட்டம் குருணாகல் – கிரிபாவ வேரகலவில் நேற்று நடைபெற்றது. இதன்போது, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து கூறுகையில் –

2019 ஏப்ரல் 21 தாக்குதலுக்கு அப்போது ஆட்சியில் இருந்த அரசாங்கமும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுமே பொறுப்புக்கூற வேண்டும்.

பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படாததால், அவ்வாறான நிலை ஏற்பட்டமை ஆணைக்குழுவின் அறிக்கையில் தெளிவாகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் இலங்கையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஐ.எஸ் ஆதரவாளர்கள் இருப்பதுடன், ஐ.எஸ் தெற்காசியாவில் காட்டுத் தீ போல் பரவுவதாகவும் முற்போக்காக இருப்பதை விட செயற்திறன் மிக்கதாக இருக்க வேண்டும் எனவும் அன்று அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது

அத்துடன் இன மற்றும் மத முரண்பாட்டை தூண்டுவதனை தடுப்பதற்கு சட்ட வரையறை தயாரிக்கப்பட வேண்டியதன் தேவையும் அன்று வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் துரதிர்ஷ்டவசமாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் அதனை செய்யத் தவறிவிட்டதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் தமிழ் அடிப்படைவாத, பிரிவினைவாத பயங்கரவாதமும் இஸ்லாம் மதவாத அடிப்படைவாதமும் தலைதூக்க தமது அரசாங்கம் இடமளிக்காது என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது தாம் அதிகாரத்தில் இருப்பதால், தவறிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டிய பொறுப்பு தமக்கு இருப்பதாகவும் ஈஸ்டர் தாக்குதலை விற்று தாம் அதிகாரத்திற்கு வரவில்லை எனவும் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம்

முன்கூட்டிய புலனாய்வு தகவல்கள் கிடைத்தபோதும் அமெரிக்காவால் கூட செப்டம்பர் 11 தாக்குதலை தடுக்க முடியவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கை மாத்திரமில்லை ஏனைய உலகநாடுகளும் பயங்கரவாத தீவிரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

உலகின் மிகவும் வலிமைவாய்ந்த நாட்டினால் கூட அதன் பாதுகாப்பு தலைமையகமாக பென்டகனை பாதுகாக்க முடியவில்லை ஆயிரக்கணக்கான உயிர்களை அது இழந்தது எனவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: