அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்தில் இலங்கைப் போக்குவரத்துச் சபை சாரதியால் முறைப்பாடு!

Wednesday, December 28th, 2022

யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கிப் பயணித்த இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தை செலுத்தி வந்தவர்களுக்கும் யாழ்ப்பாணத்தில் இருந்து அச்சுவேலி நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தை செலுத்தி வந்தவர்களுக்கும் இடையில் இன்று புதன்கிழமை (28) காலை முரண்பாடு ஏற்பட்டது.

இதனால் அப்பகுதியில் சில மணித்தியாலங்கள் தனியார் பேருந்து ஊடான போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்தது.

இலங்கைப் போக்குவரத்துச் சபை சாரதி மீது அச்சுவேலிப்பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டதுடன், இது தொடர்பாக அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்தில் இலங்கைப் போக்குவரத்துச் சபை சாரதியால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அச்சுவேலி தனியார் பேருந்து சாரதி மற்றும் நடத்துனரை விசாரணைக்காக பொலிசார் அழைத்து சென்றமைக்கு எதிர்ப்பினை தெரிவித்து தனியார்  பேருந்து உரிமையாளர்கள் அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் தனியார் பேருந்துகளை நிறுத்தி தமது எதிர்ப்பினை வெளியிட்டனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இன்று(28) காலை யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி வந்து கொண்டிருந்த 750 இலக்க வழித்தடம் பேருந்து சாரதியினை அச்சுவேலி பேருந்து நிலையத்தில் நின்ற ஒருவர் தாக்கியுள்ளார்.

இதனை அடுத்து குறித்த இ.போ.ச. பேருந்து பொலிஸ் நிலையம்  எடுத்து செல்லப்பட்டு பாதிக்கப்பட்ட சாரதியினால் அச்சுவேலி பொலிஸில்  முறைப்பாடு  பதிவு செய்யப்பட்டிருந்தது.

முறைப்பாட்டுக்கு அமைய சந்தேகத்தில் இரண்டு தனியார் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனரை அச்சுவேலி பொலிசார் விசாரணைக்காக அழைத்து சென்றிருந்தனர்.

பொலிஸ் நிலையத்தில் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் குறித்த நபர்கள் விடுவிக்கப்பட்டனர். இதனையடுத்து தனியார் பேருந்து சேவைகள் வழமை போல் இடம்பெற ஆரம்பித்துள்ளன.

தொடர்ச்சியாக இலங்கைப் போக்குவரத்துச் சபையினருக்கும் தனியார் பேருந்தை செலுத்துபவருக்கும் இடையில் ஏற்பட்ட  போட்டியால் வேகமாக பயணித்து இருதரப்புக்கும் இடையில் அடிக்கடி முறுகல் ஏற்படுவதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.

பேருந்து சாரதிகள் பயணிகளின் உயிரைப் பணயம் வைத்து தமக்குள் போட்டி போட்டு ஓடுவதனைத் தடுத்து நிறுத்துவதற்கு உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

000

Related posts: