அகில இலங்கை ரீதியில் வேம்படி மாணவி முதலிடம்! 

Thursday, March 29th, 2018

2017 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய 73.05 வீத மாணவர்கள் க.பொ.த உயர்தரத்துக்கு தகுதி பெற்றுள்ளனர்.

2017 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தினால் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டன.

குறித்த பரீட்சைக்கு ஆறு லட்சத்து 88 ஆயிரத்து 573 பரீட்சார்த்திகள் தோற்றினர். இந்தப் பரீட்சைகள் 5 ஆயிரத்து 116 பரீட்சை மத்திய நிலையங்களில் இடம்பெற்றன.

இந்நிலையில் வெளியிடப்பட்ட பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 9 ஆயிரத்து 960 மாணவர்கள் 9 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர். கணித பாடத்தில் 67.24 வீதமானோர் சித்தி பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் ஆறு இடங்களில் முதன்மை நிலைகள் பதிவாகி உள்ளன.

தமிழ் மொழிமூலம் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை யாழ்ப்பாணம் வேம்படி உயர்தர மகளிர் கல்லூரி மாணவி மிருதி சுரேஷ்குமார் பெற்றுள்ளார்.

பரீட்சை விடைத்தாள் மீள் திருத்தத்திற்காக பாடசாலை மூலமான விண்ணப்பதாரிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதிக்கு முன்னரும் தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் ஏப்ரல் 12 ஆம் திகதிக்கு முன்னரும் தமது விண்ணப்பங்களை பரீட்சைகள் திணைக்களத்துக்கு அனுப்ப வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

Related posts: