SAITM வைத்தியசாலை அரசின் கீழ் கொண்டுவரப்படும் – உயர் கல்வி அமைச்சு!

Saturday, April 8th, 2017

சர்ச்சைக்குரிய சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கான நெவில் பெனாண்டோ தனியார் வைத்தியசாலை, சுகாதார அமைச்சின் கீழ், போதனா வைத்தியசாலையாக கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக உயர் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மாலபே தனியார் வைத்தியசாலை தொடர்பில் பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ள நிலையில், நேற்றைய தினம் (07) அரசாங்க வைத்திய அதிகாரிகளால் (GMOA) வேலைநிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்ட பேரணி ஆகியன இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதன் அடிப்படையில், நேற்றையதினம் (07) பாராளுமன்றில் கருத்துத் தெரிவித்த உயர் கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல, மாலபே தனியார் வைத்திய கல்லூரி தொடர்பில் இன்றைய தினம், தமது அமைச்சினால் யோசனைகள் சிலவற்றை முன்வைக்கவுள்ளதாக தெரிவித்த நிலையில், குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதன் அடிப்படையில்,

உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் பதில் செயலாளர் ஜயந்தி வீரதுங்க  குறித்த அறிக்கை வருமாறு…

நீதிமன்ற உத்தரவிற்கு அமையவும், இலங்கை வைத்திய சங்கம் நீதிமன்றிற்கு எதிராக முன்வைத்துள்ள மேன்முறையீடு ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு பின்வரும் முடிவுகளை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  1. வைத்திய பட்டத்தை (MBBS) நிறைவு செய்து, பரீட்சையில் சித்தியடைந்த சைட்டம் மாணவர்களுக்கு ஹோமாகம மற்றும் அவிசாவளை வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சை, பிரசவம் மற்றும் சிறுவர் தொடர்பான வைத்தியம் தொடர்பில் தலா ஒவ்வொரு மாத செயன்முறை பயிற்சி வழங்கப்படும்.
  1. இப்பயிற்சிகளை அடுத்து, இலங்கை வைத்திய சபை (SLMC) மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஆகியவற்றின் ஒன்றிணைந்த மேற்பார்வையின் கீழ் இடம்பெறும் பரீட்சையில், விண்ணப்பதாரர்கள் முகம்கொடுக்க வேண்டும்.
  1. சட்ட மா அதிபரின் அனுமதியுடன், இலங்கை வைத்தியச சபையினால் முன்வைக்கப்படும், இலங்கை வைத்திய கற்கை தொடர்பான குறைந்தபட்ச தரம் தொடர்பில் சுகாதார அமைச்சினால் வர்த்தமானியில் வெளியிடப்படும்.
  1. நெவில் பெனாண்டோ போதனா வைத்தியசாலை, சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை, சுகாதார அமைச்சு மேற்கொண்டு வருவதோடு, அதனை நேரடியான போதனா வைத்தியசாலையாக நடாத்தப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: