2000 பக்கங்களில் சபையில் அறிக்கை சமர்ப்பிப்பு!

Sunday, October 30th, 2016

திறைசேரி முறி விநியோக சர்ச்சைக்கு மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் நேரடியாக பொறுப்புக் கூறவேண்டும் என்பதுடன், அவருக்கும் சம்பந்தப்பட்ட ஏனைய அதிகாரிகளுக்கு எதிராகவும் சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என கோப் குழு பரிந்துரைத்துள்ளது.

திறைசேரி முறி விநியோக சர்ச்சை தொடர்பில் விசாரணை நடத்திய கோப் குழுவின் அறிக்கை நேற்று சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி இந்த அறிக்கையை சமர்ப்பித்தார். இந்த அறிக்கை 55 பக்கங்களைக் கொண்டதாக அமைந்திருப்பதுடன், இணைப்புக்கள் 1900 இலிருந்து 2000 பக்கங்களைக் கொண்டவை என சுனில் ஹந்துன்நெத்தி குறிப்பிட்டார்.

கோப் குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களில் 16 உறுப்பினர்கள் திறைசேரி முறிவிநியோகம் குறித்த விசாரணை அறிக்கைக்கு அடிக்குறிப்பு எதுவும் இன்றி இணக்கம் தெரிவித்திருப்பதுடன், 9 உறுப்பினர்கள் அடிக்குறிப்புடன் இணக்கம் தெரிவித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

திறைசேரி முறி விநியோகத்தில் மத்திய வங்கி ஆளுநராகவிருந்த அர்ஜுன மகேந்திரன் தலையீட்டையோ அல்லது அழுத்தத்தையோ கொடுத்திருந்தாரென்பது தமது விசாரணைகளில் அவதானிக்கப்பட்டதாகவும், இந்த மோசடியால் அரசுக்கும் பொது மக்களுக்கும் ஏற்பட்ட இழப்பை பொறுப்புக் கூறவேண்டிய நபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து அறவிடப்பட வேண்டும் என அறிக்கையில் பரிந்துரைத்திருப்பதாகவும் அவர் கூறினார். இதற்குத் தேவையான அவசியமான நடவடிக்கைகள் நீதிமன்றத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட வேண்டும் என அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பரிந்துரைகள் சரியான முறையில் நிறைவேற்றப்படுவதையும், எதிர்காலத்தில் இவ்வாறான மோசடிகள் இடம்பெறுவதைத் தடுப்பதற்குமான பொறுப்பு மத்திய வங்கிக்குரியது. இதற்குப் பொருத்தமான பொறிமுறையொன்றும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

நிதித் தேவைக்காக மத்திய வங்கியினால் கேள்விப்பத்திரங்கள் கோரப்படும் சந்தர்ப்பங்களில் சகல செயற்பாடுகளையும் கண்காணிப்பதற்கும், பின்னூட்டங்களைப் பெறுவதற்கும் ஜனாதிபதியால் விசேட கண்காணிப்புக் குழுவொன்று உடனடியாக நியமிக்கப்பட வேண்டும் எனவும் பரிந்துரைத்திருப்பதாக சுனில் ஹந்துன்நெத்தி குறிப்பிட்டார்.

திறைசேரி முறி விநியோகம் தொடர்பான விசாரணை அறிக்கை மற்றும் அதனுடன் தொடர்பான சகல இணைப்புக்களும் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் விரிவான விவாதமொன்று நடத்தப்பட்டு தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என்றும் கோப் குழு பரிந்துரைத்துள்ளது.

திறைசேரி முறி விநியோகம் தொடர்பான கோப் குழுவின் விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டிருந்தாலும் இதன் உள்ளடக்கம் தொடர்பிலும், நோக்கம் தொடர்பிலும் உறுப்பினர்களுக்கிடையில் கருத்து முரண்பாடுகள் இருந்தன என்பது தெளிவாகியிருப்பதாகவும், இருந்தபோதும் பரிந்துரைகளுக்கு சகல கோப் உறுப்பினர்களும் இணக்கத்தைத் தெரிவித்திருப்பதாகவும் கூறினார். இருந்தபோதும் அடிக்குறிப்புடன் கூடிய அறிக்கைக்கு 16 உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.அதேபோல அடிக்குறிப்பு இல்லாத அறிக்கைக்கு 9 உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்திருப்பதாகவும் கூறினார்.

colsunil-handunnetti174904620_4042388_24022016_kaa_cmy

Related posts: