11 பேர் கடத்தல் – லெப்டினன்ட் கொமாண்டரை கைது செய்யுமாறு உத்தரவு!

Saturday, March 25th, 2017

2008 ஆம் ஆண்டு கொழும்பில் ஐந்து மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை தொடர்பான வழக்கின் நான்காவது சந்தேகநபரான லெப்டினன்ட் கொமாண்டர் ஹெட்டியாராச்சியை உடனடியாகக் கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை கோட்டை நீதவான் லங்கா ஜெயரத்ன முன்னிலையில் இடம்பெற்ற போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரைக் கைது செய்வதற்கு ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை அவர் கைது செய்யப்படாமை ஏன் என நீதவான் கேள்வி எழுப்பியுள்ளார்.

குறித்த சந்தேகநபரைக் கைது செய்வதற்கு, கடற்படைத் தளபதி இதுவரை அவரை கையளிக்கவில்லை என குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.எனினும், யாருடைய தலையீடுமின்றி உடனடியாக அவரை கைது செய்யுமாறு நீதவான் இன்று மீண்டும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளின் அடிப்படையில் வெளியாகியுள்ள புதிய தகவல்களின் பிரகாரம், இந்த கடத்தல் சம்பவத்தின் முதலாவது சந்தேகநபரான லெப்டினன்ட் கொமாண்டர் முணசிங்க ஆராச்சிகே தொன் நிலந்த சம்பத் முணசிங்கவை மீண்டும் கைது செய்யுமாறு மனுதாரர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள குறித்த சந்தேகநபரை கைது செய்வதற்கான விண்ணப்பத்தை எழுத்துமூலம் மன்றில் சமர்ப்பிக்கும் பட்சத்தில் அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் நீதவான் அறிவித்துள்ளார்.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கடற்படையைச் சேர்ந்த இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.நீதிமன்ற விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்களை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

2008 இல் கொட்டாஞ்சேனை, வத்தளை, மட்டக்குளி மற்றும் தெஹிவளை ஆகிய பகுதிகளை அண்மித்துள்ள பாடசாலை மாணவர்கள் ஐவர் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளை அடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய கடற்படை உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts: