வெள்ளைப் பிரம்பு பார்வையற்றவர்களின் அடையாளச் சின்னம்:சுன்னாகம்  வாழ்வக விழிப்புலன் வலுவிழந்தோர் இல்லத் தலைவர் !

Tuesday, October 18th, 2016

வெள்ளைப் பிரம்பு தொடர்பாகப் பொதுமக்கள் உணர்ந்து கொள்ளைக் கூடிய சில விடயங்கள் காணப்படுகின்றன. வெள்ளைப் பிரம்பு எனப்படுவது கண்பார்வையற்றவர்கள்   பயன்படுத்து கின்றதொரு சாதனம். வெள்ளைப் பிரம்பு பார்வையற்றவர்களின் ஒரு அடையாளச் சின்னமாகவும் காணப்படுகிறது என சுன்னாகம்  வாழ்வக விழிப்புலன் வலுவிழந்தோர் இல்லத் தலைவரும், யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியற் கல்லூரியின் விரிவுரையாளருமான இரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.சுன்னாகம் லயன்ஸ் கழகமும், சுன்னாகம் வாழ்வக விழிப்புலன் வலுவிழந்தோர் இல்ல சமூகமும் இணைந்து ஏற்பாடு செய்த வெள்ளைப் பிரம்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (16) சுன்னாகம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்க முன்றலில் ஆரம்பமாகி இடம்பெற்றது.

குறித்த ஊர்வலம் சுன்னாகம் பிரதான பேருந்து நிலையத்தைச் சென்றடைந்த பின் அங்கு உரையாற்றிய   இரவீந்திரன் மேலும் தெரிவிக்கையில் –

சாதாரணமாகச் சமூகத்திலுள்ள பலரையும் அவர்களின் சீருடைகள் மூலமாக அடையாளம் கண்டு கொள்ளக் கூடியதாகவிருக்கும். ஒரு பாடசாலை மாணவன், வைத்திய அதிகாரி, பொலிஸ் உத்தியோகத்தர், இராணுவ வீரன்  போன்றவர்களையெல்லாம் அவர்களுடைய சீருடைகள் மூலம் நாங்கள் அடையாளம் கண்டு கொள்ள முடியும். அதேபோன்று கையிலே ஒருவர் வெள்ளைப் பிரம்பை வைத்திருந்தால் அவர் பார்வையற்றவர் அல்லது பார்வைக் குறைபாடுள்ளவர் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

பார்வைக் குறைபாடுள்ள ஒருவர் வெள்ளைப் பிரம்பைக் கைகளில் தாங்கி வீதியில் செல்லும் போது வீதியில் முதலில் நடந்து செல்லும் உரிமையுண்டு. வீதியை முதலில் கடக்கும் உரிமையுண்டு. எந்தவொரு பொதுப் போக்குவரத்து வாகனத்தை மறிக்கவோ, சாத்தியமாகும் பட்சத்தில் அதில் ஏறிக் கொள்ளவோ அவர்களுக்கு  உரிமையுண்டு. இவை சர்வதேச ரீதியாகவும் , சட்ட ரீதியாகவும் உள்ள உரிமைகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

துவிச்சக்கர வண்டிகள், மோட்டார்ச் சைக்கிள்கள், வாகனங்களில் செல்பவர்கள் வெள்ளைப் பிரம்புகளுடன் வீதிகளில் செல்பவர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் செயற்பட வேண்டும். விழிப்புலனற்றோர் தாங்குவது வெள்ளைப் பிரம்பு… அதனை மதித்து நடக்க நீ நாளும் விரும்பு…. எனவும் தெரிவித்தார்.

Untitled-3 copy

Related posts: