விவசாய நிலங்களை பாதுகாப்பதற்கு மழைநீரைத் தேக்கிவைக்கத் திட்டம்!

Friday, October 13th, 2017

நவாலி கல்லுண்டாய் கடற்கரையோரப் பிரதேசத்தில் விவசாய நிலங்கள் உவராகி வருகின்றன. குடிநீர்க் கிணறுகளும் உவர்த் தன்மை அடைகின்றன. இதனைத் தடுப்பதற்கு மழைநீர் தேக்கிவைக்கப்படவுள்ளது.

சுமார் 60 ஏக்கர் பரப்பளவிலான காணியில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. தற்போது நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் மண் அணை கட்டும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டவை வருமாறு:

வலி.வடக்குப் பிரதேசத்தில் தெல்லிப்பழையிலிருந்து வலி.தெற்கு, வலி.தென்மேற்கு ஆகிய பிரதேசங்களூடாக சுமார் 15 கிலோமீற்றர் நீளமான வழுக்கையாறு கல்லுண்டாய் பாலம் வரை சென்றடைகின்றது. இந்த வாய்க்கால் மூலமாக வரும் மழை வெள்ளத்தைத் தேக்கி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நீர் கல்லுண்டாய் பாலம் ஊடாக கடலைச் சென்றடைகின்றது. கல்லுண்டாய்ப் பிரதேசத்தை அண்டியுள்ள நவாலிப் பகுதியிலுள்ள நெற்காணிகள் நாளுக்கு நாள் உவர்நிலமாக மாறி வருகின்றன. நெற் செய்கையும் நிறுத்தப்பட்டுள்ளது. இதே போல் இந்தப் பிரதேசத்திலுள்ள கிணறுகளும் உவர் நீராக மாறி வருகின்றன. இப்பிரதேசத்தில் வாழும் நூற்றுக்கணக்கான குடும்பத்தவர்கள் குடிநீரைத் தேடி தூர இடங்களுக்கு அலைய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில் விவசாய சம்மேளனங்களின் கோரிக்கையைத் தொடர்ந்து மழைகாலங்களில் வீணாகக் கடலுக்குச் செல்லும் மழைநீரைத் தடுத்து வைப்பதற்கான முயற்சியில் நீர்ப்பாசனத் திணைக்களம் ஈடுபட்டுள்ளது.

கல்லுண்டாய், காத்துக்கட்டி, நவாலி ஊரியோடை மயானத்தை அண்டிய பகுதிகளில் 90 ஏக்கர் நிலப்பரப்பில் மழைநீர் தேக்கிவைக்கப்படவுள்ளது. இதற்கு வசதியாக மழைக்காலத்தை கருத்திற் கொண்டு முதற்கட்டமாக மண் அணை கட்டும் வேலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மழைநீரைத் தேக்கி வைப்பதனால் இப் பகுதியில் உவர் நிலமாக மாறிவரும் 300 ஏக்கர் காணியையும் பாதுகாக்கமுடியும் என்று குறிப்படப்பட்டுள்ளது.

Related posts: