வவுனியா சதொசவில் விற்கப்பட்ட சீனியில் யூரியா!

Friday, August 3rd, 2018

வவுனியா சதொச விற்பனை நிலையத்தில் விற்பனை செய்யப்பட்ட சீனியை பயன்படுத்த வேண்டாமென சுகாதாரப் பரிசோதகர்கள் எச்சரித்துள்ளனர். அதில் தவறுதலாக யூரியா கலந்துள்ளது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

வவுனியா சதொசவில் பொருள்களைக் கொள்வனவு செய்ய வந்த ஒருவர் தனது தேவைக்காகப் பையொன்றை எடுத்துள்ளார். அதிலிருந்தது யூரியா என்பதை அறியாத அவர் சீனி என நினைத்து சீனிக் கொள்கலனுக்குள் கொட்டியுள்ளார். அதை அறியாத ஊழியர்கள் சீனியை விற்பனை செய்துள்ளனர்.

அதைக் கொள்வனவு செய்த வாடிக்கையாளர் ஒருவர் சீனியில் இரசாயனப் பொருள் கலந்துள்ளது என்று தெரிவித்து மீளக்கொண்டு வந்து கொடுத்துள்ளார். அதன்பின்னர் ஆராய்ந்தபோது சீனியில் யூரியா கலந்திருப்பது தெரியவந்துள்ளது.

பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் விற்பனை நிலையம் சென்று ஆய்வுகளை மேற்கொண்டனர். சில சீனி மூடைகளைத் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். நேற்று அண்ணளவாக 100 கிலோகிராம் சீனி விற்பனை செய்யப்பட்டுள்ளது. சீனியைக்கொள்வனவு செய்தவர்கள் அதைப் பயன்படுத்தாது மீள ஒப்படைக்குமாறு சுகாதாரப் பரிசோதகர்கள் அறிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related posts: