வற் வரி அதிகரிப்பு சட்டமூலத்தில் சிக்கல்! தலைநகரில்  இன்று போராட்டம்!!

Wednesday, October 5th, 2016

நல்லாட்சி அரசாங்கம் நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த வற் வரி அதிகரிப்பிற்கான சட்டமூலத்தில் நிலையியற் சட்டங்கள் மீறப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

வற் வரி அதிகரிப்பு தொடர்பான சட்டமூலம் கடந்த செப்டம்பர் மாதம் 09ம் திகதி வர்த்தமானி அறிவித்தலாக அச்சிடப்பட்டுள்ளது.எனினும் வரி அதிகரிப்பிற்கான அமைச்சரவை அனுமதி செப்டம்பர் 12ம் திகதி கூடிய அமைச்சரவைக் கூட்டத்தின் போதே வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து செப்டம்பர் 13ம் திகதி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.பொதுவாக சட்டமூலம் ஒன்று அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டதன் பின்னரே அன்றைய திகதியைக் குறிப்பிட்டு வர்த்தமானி அறிவித்தல் தயார்படுத்தப்பட வேண்டும்.

எனினும் வற் வரி அதிகரிப்பு சட்டமூலத்தில் இந்த விதி மீறப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் இதுகுறித்து கூட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன சுட்டிக்காட்டிய போது , இதில் சிக்கல் இருப்பதாக தோன்றினால் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யுமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதனிடையே அரசாங்கத்தின் வரி அதிகரிப்பை எதிர்த்து கொழும்பில் இன்று தொழிற்சங்க போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.வரி அதிகரிப்பு மற்றும் அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் அரசாங்கத்தின் செயல்பாடு ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.

இதில் தனியார் தொழிற்துறை சார் மற்றும் தொழிலாளர் நலன் பேணல் சார்ந்த சுமார் 20 தொழிற்சங்கங்கள் கலந்து கொள்ளவுள்ளன.வரி அதிகரிப்பைக் குறைத்து பொதுமக்களின் வாழ்க்கைச் செலவுச் சுமையைக் குறைக்க வேண்டும் என்பது இந்தப் போராட்டத்தின் நோக்கம் என்று அதன் ஏற்பாட்டாளர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.புறக்கோட்டை அரச மரத்தடி முன்பாக இன்று மாலை நான்கு மணிக்கு இந்தத் தொழிற்சங்கப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

VAT-720x480

Related posts: