வடமாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் உள்ளிட்ட 9 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை!

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் வடமாகாண பணிப்பாளர், உதவிப் பணிப்பாளர் உள்ளிட்ட 9 பேருக்கு எதிராக வனப்பாதுகாப்புத் திணைக்களத்தின் முல்லைத்தீவு அலுவலகம் நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.எம். சம்சுதீன் முன்னிலையில் வனப்பாதுகாப்பு அலுவலகத்தினால் இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இரணைமடு குளப் புனரமைப்புக்காக குளத்தை அண்மித்த வனப்பகுதிக்குள் சட்டவிரோதமாக பிரவேசித்தமை,வனப்பகுதியில் மண் அகழ்வு மேற்கொண்டமை மற்றும் வனத்திற்கு சேதம் ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் பிரதிவாதிகளுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக கடந்த மாதமளவில் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் வடமாகாண பணிப்பாளர், உதவிப் பணிப்பாளர் உட்பட 9 பேருக்கு எதிராக முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த நிலைமையின் கீழ், இன்றைய தினம் வனப்பாதுகாப்பு அலுவலகத்தினால் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இதனையடுத்து, பிரதிவாதிகளை தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்வதற்கு நீதிபதி அனுமதி வழங்கினார்.இந்த வழக்கு விசாரணை நவம்பர் மாதம் 25 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|