வடமராட்சி கிழக்கில் “பல நாள் படகு” கன்னிப் பயணம் புதனன்று !

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட வத்திராயன் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தினுடைய பல நாள் படகு புதன்கிழமை முதன்முதலாக தொழிலுக்குச் செல்லும் பயணம் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வத்திராயன் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் ம.றதீஸ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆரம்ப விழாவில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் க.கனகேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
வத்திராயன் கடற்பரப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த பலநாள் படகிற்கு சிறிய படகுகள் மூலம் விருந்தினர்கள் அழைத்துச் செல்லப்பட்டு சமய கிரியைகள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து பிரதேச செயலர் க.கனகேஸ்வரன் வைபவ ரீதியாக படகின் இயந்திரத்தை இயங்க வைத்து அதன் கன்னிப் பயணத்தை ஆரம்பித்து வைத்தனர்.
சுமார் 30 மில்லியன் ரூபா பெறுமதியான இப்படகு இப்பிரதேசத்தில் மீள்குடியேற்ற கட்டுமானப் பணிகளை மேற்கொண்ட சுவிஸ் அபிவிருத்தி அமைப்பின் வாழ்வாதாரப் பிரிவால் வத்திராயன், உடுத்துறை, ஆழியவளை ஆகிய கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களுக்கு வழங்கியிருந்தன.
இதன்போது ஏற்பட்ட சில இடையூறுகள் காரணமாக இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சில தாமதங்கள் ஏற்பட்டு தற்போது அரசாங்க அதிபரினால் ஒவ்வொரு படகிற்கும் தலா 1.5 மில்லியன் ரூபா வழங்கப்பட்ட நிலையில் முதன்முதலாக அன்றையதினம் வத்திராயன் சங்கத்திற்குரிய படகின் தொழில் ஆரம்பிக்கப்பட்டது.
ஏனைய இரண்டு சங்கங்களுக்குரிய படகுகளும் மிக விரைவில் தமது தொழில் நடவடிக்கையினை ஆரம்பிக்கவுள்ளதாகவும் மேலும் தெரியவருகின்றது.
Related posts:
|
|