வடக்கு ஆளுநரின் கையில் பல்கலைக்கழக சமரசத் திறவுகோல்!

Thursday, August 25th, 2016

அண்மையில் யாழ். பல்கலைக்கழகத்தின் தமிழ் சிங்கள மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின் பின்னரான நிலமைகளை சமாதானப்படுத்துவதற்கு பல்கலைகழக நிர்வாகம் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடமாகாண ஆளுநர் சம்மதித்தால் மாத்திரமே அது சாத்தியமாகும் என சிங்கள மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவர்கள் வரவேற்பு நிகழ்வில் வழமைக்கு மாறாக கண்டிய நடனத்தை நடாத்த முற்பட்டதையடுத்து தமிழ், சிங்கள மாணவர்களுக்கு இடையில் கருத்து முரண்பாடு இடம்பெற்று பின்னர் கைகலப்பு இடம்பெற்றது. அத்துடன் இந்த சம்பவத்தில் சம்பவத்தில் சில மாணவர்கள் காயங்களுக்கு உள்ளாகியிருந்தனர்.

இதனையடுத்து மாணவர்களின் பாதுகாப்பு கருதி பல்கலைக்கழகத்தின் கற்றல் செயற்பாடுகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்ததுடன் மேற்படி தாக்குதல் சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட இரு தரப்பு மாணவர்களும் பொலிஸாரிடத்தில் மேற்கொண்ட முறைப்பாடு களுக்கமைய இரு தரப்பினர்களுக்கு எதிராகவும் யாழ்.நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் இந்த மோதல் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்க பல்கலைக்கழக நிர்வாகத்தினால் விசாரணைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல்கலைக்கழகத்தின் கற்றல் செயற்பாடுகள் படிப்படியாக ஆரம்பிக்கப்பட்டு, தற்போது பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களின் கற்றல் செயற்பாடுகளும் முழு அளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்களிடையே இடம்பெற்ற மோதல் சம்பவத்தின் பின்னரான நிலமைகளை சமரசப்படுத்துவதற்கான முயற்சிகள் பல்கலைக்கழக நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வந்தது. குறிப்பாக பல்கலைகழக நிர்வாகத்தினர், மாணவர்கள் தரப்பினர்களும் அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினைச் சந்தித்தும் சில முடிவுகளை எடுத்திருந்தனர்.

இதன்படி மோதில் ஈடுபட்ட இருதரப்பு மாணவர்களையும் அழைத்த பல்கலைக்கழக நிர்வாகத்தினர் இரு தரப்பினர்கள் மத்தியிலும் சமரசப் பேச்சில் ஈடுபட்டிருந்தனர். இப் பேச்சுவார்த்தையின் பிரகாரம் பொலிஸாரிடத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினை மீளப்பெறுவது தொடர்பாக கருத்துக்கள் பகிரப்பட்டது.

இந்நிலையில் இக் கருத்துடன் தமிழ் மாணவர்கள் ஒன்றுபட்டிருந்தனர். எனினும் கலந்துரையாடலில் வைத்து சிங்கள மாணவர்களும் முறைப்பாட்டினை மீளப் பெறுவதற்கு ஒப்புக் கொண்டிருந்தாலும் அது தொடர்பாக எழுத்து மூல ஆவணங்கள் தயாரிப்பிற்கு அவர்கள் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

 குறிப்பாக தமது நிலமைகள் தொடர்பாக வடமாகாண ஆளுநர் ரெஜினோட் குரே அக்கறையுடன் செயற்படுகின்றார் என்றும், அவரின் சம்மதம் இல்லாமல் எந்தவிதமான ஆவணங்களையும் தாம் வழங்க மாட்டோம் என்று சிங்கள மாணவர்கள் நிர்வாகத்திடம் தெரிவித்து விட்டு அங்கிருந்து விலகிச் சென்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது

Related posts: