வடக்கிலும் சிங்களவர்கள் வாழலாம் – வடக்கின் ஆளுனர்!

Wednesday, March 30th, 2016

வெள்ளவத்தையில் காணிகளை வாங்கி தமிழர்கள் குடியேறி வாழ்ந்து வருகின்றபோது வடக்கில் சிங்களவர்கள் காணிகள் வாங்கி தமது வாழ்க்கையை ஏற்பாடுத்திகொள்ளலாம் என்று வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தள்ளார்.

சர்வோதயம் அமைப்பின் யாழ்ப்பாண அலுவலக ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு, நாவலர் வீதியில் அமைந்துள்ள சொர்ணாம்பிகை மண்டபத்தில் (29) நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஆளுநர் நிகழ்வு முடிந்து வெளியில் வந்தபோது,அத்துமீறிய சிங்களக் குடியேற்றம் நில ஆக்கிரமிப்பு என்பவற்றுக்கு எதிராக வடமாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. அது தொடர்பில் உங்கள் நடவடிக்கை என்ன?’ என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது குறித்து தொடர்ந்து கருத்து தெரிவித்ததாவது –

வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை, இன்னமும் எனக்குக் கிடைக்கவில்லை. அந்தப் பிரேரணை கிடைக்கப்பெற்ற பின்னர், அது தொடர்பில் கதைக்க முடியும். எங்கள் நாட்டில் உள்ள சட்டத்தின் பிரகாரம், பணம் இருந்தால் எவரும் எங்கும் காணிகளை கொள்முதல் செய்யமுடியும். விற்பவர் விரும்பினால், எவரும் எந்தப் பிரதேசத்திலும் காணிகளை கொள்முதல் செய்ய முடியும். அது, ஆக்கிரமிப்பு என்று அர்த்தப்படாது’ என்றார்.

‘முன்னர் பதவியிலிருந்த ஆளுநர்களுக்கும் வடமாகாண சபைக்கும் முரண்பாடுகள் இருந்தன. உங்களுக்கும் வடமாகாண சபைக்கும் எவ்வாறான உறவு உள்ளது?’ என்ற  கேள்விக்குப் பதிலளித்த ஆளுநர், ‘வடமாகாண சபையும் நானும் நல்ல நண்பர்கள். எங்களுக்குள் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இருக்கின்றது. அவர்கள், தங்கள் அரசியலை செய்யட்டும், நான் எனது கடமையைச் செய்கின்றேன்’ என்றார்.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள கஞ்சாக் கடத்தல் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், ‘இந்தியாவுக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான தூரம் குறைவாக இருப்பதால், இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு கஞ்சாக் கடத்தல் இலகுவாக இடம்பெறுகின்றது. பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மாத்திரமே, இதனை முழுவதுமாக கட்டுப்படுத்த முடியும்’ என்றார்.

‘கடற்படையினரும் பொலிஸாரும், கஞ்சாக் கடத்தலை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், பொதுமக்களின் தகவல்கள் இல்லாமல் அவர்களால் கட்டுப்படுத்த முடியாது. தகவல்களை, பொதுமக்களே வழங்க வேண்டும். சரியான தகவல்கள் இல்லாமையால் கஞ்சாக் கடத்தலில் பின்னணியில் இருக்கின்ற பெரிய ஆட்களைப் பிடிக்க முடியாதுள்ளது’ என்று அவர் மேலும் கூறினார்.

Related posts: