லசந்தவின் சாரதி கொலையாளியை அடையாளங்காட்டினார்!

Thursday, July 28th, 2016

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பில், சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரை, லசந்த விக்கிரமதுங்கவின் சாரதி, அடையாளங்காட்டியுள்ளார். இந்த அடையாள அணிவகுப்பு, கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (27) இடம்பெற்றது.

லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில், அவருக்கு சாரதியாக இருந்தவரே, சந்தேகநபரான இராணுவப் புலனாய்வுப் பிரிவில் சேவையாற்றிய இராணுவ சான்ஜன்டான பிரேம ஆனந்த உதலாகம என்பவரை அடையாளங்காட்டியுள்ளார்.

சி.ஐ.டியினால், ஆனந்த உதலாகம, கடந்த வெள்ளிக்கிழமையன்று (15) கைதுசெய்யப்பட்டு, நேற்றுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். இந்த அடையாள அணிவகுப்பு, மேலதிக நீதவான் சுலோச்சனா வீரசிங்க முன்னிலையில் இடம்பெற்றது.

லசந்தவுடன் தான் வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது, தெஹிவளை-அத்திட்டியவிலுள்ள பேக்கரிச் சந்தியில் வைத்து வீதி சமிஞ்ஞைகளுக்காக வாகனம் நிறுத்தப்பட்டது. அதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களில் இருவரில், ஒருவர், நாங்கள் பயணித்த வாகனத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டார்.

அவர், தான் அணிந்திருந்த தலைக்கவசத்தை (ஹெல்மெட்) தூக்கிவிட்டே துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டார். அதன்போது தான் கண்டுக்கொண்டதாக, சந்தேகநபரை அடையாளங்காட்டியதன் பின்னர், லசந்த விக்கிரமதுங்கவின் சாரதி தெரிவித்தார்.

அடையாள அணிவகுப்பின் பின்னர், அடையாளங்காட்டப்பட்ட சந்தேகநபர், கல்கிஸை பிரதான நீதவான் மொஹமட் சஹாப்தீனின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவரை எதிர்வரும் மூன்றாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீதவான் உத்தரவிட்டார்.

லசந்த விக்கிரமதுங்க, 2009ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதியன்று, மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களால், தெஹிவளை – அத்திட்டியவிலுள்ள பேக்கரிச் சந்தியில் வைத்து, சுட்டுப் படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அடையாளங்காட்டப்பட்ட சந்தேகநபர், ரிவிர பத்திரிகையின் ஆசிரியரை அச்சுறுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு எதிராக மற்றுமொரு நீதிமன்றத்தில் வழக்கொன்றும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related posts: