யாழ். முஹம்மதியா ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளை இடைநிறுத்த தீர்மானம்!

Monday, June 7th, 2021

யாழ்ப்பாணம் கலீபா அப்துல் காதர் வீதியில் அமைந்துள்ள முஹம்மதியா ஜும்ஆ பள்ளிவாசலில் தலைவர் உட்பட அனைத்து நிர்வாகிகளையும், பொறுப்பதாரிகளையும் உடன் அமுலுக்குவரும் வகையில் இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் விசேட நிர்வாக குழுவொன்றை நியமனம் செய்வதற்கும் இலங்கை வக்பு சபை தீர்மானித்துள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த பள்ளவாசலில் கடந்த 4ஆம் திகதி நடமாட்ட கட்டுப்பாடுகளை மீறி தலைவர் உட்பட 14 பேர் ஒன்று கூடி இருந்தமையால் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் தரப்பினரால் தனிமைப்படுத்தப்பட்டனர்.

பள்ளிவாசலின் தலைவர் உட்பட நிர்வாகிகள் தொடர்ந்தும் அரசாங்கத்தின் சட்டங்களை மீறி நடந்துள்ளமையால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பகிரங்க அறிவித்தல்களுக்கு மேலதிகமாக பள்ளிவாசலின் தலைவரை திணைக்கள உத்தியோகத்தர்கள் நேரில் சந்தித்து எச்சரிக்கை செய்திருந்தும் இவ்வாறு பொறுப்பற்ற முறையில் நடந்திருப்பது மிகவும் கவலை அளிப்பதாகவும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

அதான் சொல்வதற்காகவும் கொவிட்-19 அல்லது நிவாரணம் தொடர்பான விசேட அறிவித்தல்களைச் செய்யவும் முஅத்தின் அல்லது இமாம் மாத்திரம் பள்ளிவாயலில் நுழைய அனுமதிக்கப்படலாம் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: