யாழ்.மாநகர சபையின் ஆணையாளருக்கு  எதிராக யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட இறைச்சிக்கடை உரிமையாளர்கள் கடையடைத்து கவனயீர்ப்புப் போராட்டம்

Sunday, April 10th, 2016

யாழ்.மாநகர சபையின் ஆணையாளருக்கு  எதிராக யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட இறைச்சிக்கடை உரிமையாளர்கள் நேற்று (09) யாழ்.பண்ணைக்கு முன்பாகக்  கவனயீர்ப்புப்  போராட்டமொன்றை  முன்னெடுத்தனர்.

கடையடைப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து அடையாளக் கவனயீர்ப்பிலும் அவர்கள்  ஈடுபட்டனர். இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட நாவாந்துறை, குருநகர்,பாசையூர் மற்றும் யாழ்ப்பாணம் பண்ணை, அரியாலை போன்ற இடங்களில் உள்ள இறைச்சிக்கடை தொகுதியின் உரிமையாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு பதாதைகளையும் கைகளில் ஏந்தித் தமது எதிர்ப்பினை வெளிக் காட்டினர்.

யாழ்.மாநகர சபைக்குட்பட்ட 24 இறைச்சிக்கடைஉரிமையாளர்களுக்கான அனுமதிப் பத்திரங்கள் மற்றும் கொல்களனுக்கு மாடுகளையும், ஆடுகளையும் கொண்டுவரும் போது அவற்றிக்கான அனுமதிப்பத்திரங்கள் யாழ்.மாநகர சபை ஆணையாளரினால் இதுவரை வழங்கப்படவில்லை எனவும், குறித்த அனுமதிப் பத்திரங்கள் இதுவரை வழங்கப்படாத காரணத்தால் பெரும் அசௌகரியங்களுக்கு உட்பட்டுள்ளதாகவும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட இறைச்சிக்கடை உரிமையாளர்கள் கவலை வெளியிட்டனர்.

கடந்த நான்கு வருடங்களுக்கு  மேலாக யாழ்.மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில்   இறைச்சிக்கடைத்தொகுதிகள் காணப்பட்ட போதிலும்   இன்றுவரையும் அவற்றிக்கான கொல்களனுக்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படவில்லையெனப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சுட்டிக் காட்டினர்.

தாம் எதிர்நோக்கும் பாதிப்புக்களுக்கு உடனடித் தீர்வு பெற்றுத் தரப்படாவிட்டால்   எதிர்வரும்  திங்கட்கிழமை யாழ் மாநகர சபையின் முன்பாகப் பாரிய கவனயீர்ப்புப் போராட்டம்  இடம்பெறும் என இறைச்சிக்கடைஉரிமையாளர்கள் எச்சரித்துள்ளனர்

Related posts: