யாழ்.நகர் அபிவிருத்தி: வடக்கின் முதல்வர் தலைமையில் புறக்கணிப்பு!

Wednesday, May 25th, 2016

வடமாகாண ஆளுநரினால் ஏற்பாடு செய்யப்பட்ட யாழ்.நகர அபிவிருத்தி குறித்து கலந்துரையாடலை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பல மாகாண சபை உறுப்பினர்கள் புறக்கணித்துள்ளனர்.

யாழ். நகரை அபிவிருத்தி செய்வதற்காக உலக வங்கியினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலம் யாழ். நகரப் பகுதியை அபிவிருத்தி செய்வது குறித்து வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயின் ஏற்பாட்டில், ஆளுநர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இந்தகலந்துரையாடல் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில், வடமாகாண முதலமைச்சர் மற்றும் கே.சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் உட்பட பல உறுப்பினர்கள் சமுகமளிக்கவில்லை.

வடமாகாண முதலமைச்சரினால், வடமாகாண ஆளுநரின் செயலாளருக்கு குறித்த கலந்துரையாடலை ஒத்திவைக்குமாறு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டதுடன், குறித்த கடிதம் ஏனைய வடமாகாண சபை உறுப்பினர்களுக்கும் மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் உறுப்பினர்கள் சிலர் தெரிவித்தனர்.

இவ்வாறான நிலமையில், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம். சுமந்திரன், ஈ.சரவணபவன், தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்களான ஆர்னோல்ட், எஸ் சயந்தன், எஸ் சுகிர்தன், ஆ.பரம்சோதி, அஸ்மின் ஐயூப் சிவயோகம் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

வடமாகாண ஆளுநர் தனது பொறுப்பினை மீறி செயற்படுவதாகவும், ஆளுநரினால் அழைப்பு விடுக்கப்பட்ட இந்த கலந்துரையாடலில் தாம் கலந்துகொள்ளப் போவதில்லையெனவும் சில உறுப்பினர்கள் கூட்டத்தை புறக்கணிப்புச் செய்தனர்.

இலங்கை தமிழரசு கட்சியின் பெரும்பான்மையானோர் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்ட போதிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொள்ளாது புறக்கணிப்புச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

அனைத்து பாதுகாப்பு முன்னெடுப்புகளுடன் நாளை ஆரம்பமாகின்றது உயர்தரப் பரீட்சைகள் – இன்றையதினம் வெற்றிகர...
அரசியல் ஆலோசனைப் பொறிமுறையொன்றை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இலங்கை – ஆப்கானிஸ்தான் கைச...
வாழ்க்கை செலவு அதிகரிப்பு குறித்து அமைச்சரவை கூட்டத்தில் நீண்ட நேரம் ஆராய்வு - அமைச்சர் மகிந்த அமரவ...