மிஹின் லங்கா நிறுவனத்தின் 50 வீதமான ஊழியர்கள் ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்துடன் இணைப்பு!

Thursday, October 6th, 2016

மிஹின் லங்கா நிறுவனத்தில் பணியாற்றிய 50 வீதமான ஊழியர்களை தமது நிறுவனத்துடன் இணைத்துக்கொள்வதாக ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் பல குறுந்தூர விமான சேவைகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் கடந்த காலங்களில் அடைந்த நட்டம் குறைக்கப்பட்டுள்ள போதிலும், 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையான முதல் காலாண்டில் இந்த நிறுவனம் 9.03 பில்லியன் ரூபா நட்டமடைந்துள்ளது.

இந்த பின்புலத்தில், 2013ஆம் ஆண்டு A350 எயார் பஸ்களை கொள்வனவு செய்வதற்காக செய்துகொண்ட உடன்படிக்கையை இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும், சட்டப்பூர்வமான உடன்படிக்கைக்கு ஏற்ப சில கொடுப்பனவுகளை செலுத்த வேண்டிய தேவை நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ளது.செலவுகளை குறைக்கும் நோக்கில் எதிர்வரும் நவம்பர் மாதத்திலிருந்து ஐரோப்பாவுக்கான விமான சேவைகளை இடைநிறுத்துவதற்கும் லண்டனுக்கான விமான சேவையை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், விமான நிலையத்தின் செயற்பாட்டு நடவடிக்கைகளை வேறொரு நிறுவனம் மூலம் முன்னெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலாபத்தை ஈட்ட முடியுமான நாடுகளுக்கான விமான சேவைகளை அதிகரிப்பதற்கும் ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் தீர்மானித்துள்ளது.இதேவேளை, அடுத்த வருடம் ஜனவரி மாதம் 5 ஆம் திகதியிலிருந்து கட்டுநாயக்க விமான ஓடுபாதை புனரமைக்கப்படவுள்ளமையால், பகல் நேரத்தில் விமான நிலையம் 8 மணித்தியாலங்களுக்கு மூடப்படவுள்ளது.

நான்கு மாதங்களுக்கு புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளமையால் 200 க்கும் அதிகமான சர்வதேச விமான சேவைகளை இடைநிறுத்த வேண்டியேற்பட்டுள்ளதாக இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.

 SriLankan-Airlines-Mihin-Lanka-codeshare-to-Kolkata

Related posts: