மாற்றுத் திறனாளிகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள்: வடக்கு கிழக்கில் வாழும் அனைத்து மாற்றுத் திறனாளிகளும் அழைக்கப்படுவர் !

Monday, June 6th, 2016

தமிழ் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினால் – Differently Able Tamils Association (DATA ) மாற்றுத்திறனாளிகளுக்கிடையிலான விளையாட்டுப்போட்டிகள் இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நடைபெற ஏற்பாடு செய்யப்படுகின்றது.

வடமாகாணத்தின் போட்டிகள் வவுனியா மாவட்டத்திலும் கிழக்கு மாகாணத்தின் போட்டிகள் மட்டக்களப்பிலும் நடாத்தப்படுகின்றது.

இப்போட்டிகள் ஆவணி அல்லது புரட்டாதி மாதத்தில் நடாத்தப்படும். தற்போதைய நிலையில் வடக்கு மாகாணப்போட்டிகள் அனைத்தும் உயிரிழையில் ஒருங்கிணைப்பிலும் , கிழக்கு மாகாணத்தின் போட்டிகள் அனைத்தும் மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் சம்மேளனம் ஒருங்கிணைப்பிலும் நடைபெறும் எனத் தமிழ் மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் செயலாளரும், உயிரிழை அமைப்பின் செயலாளருமான சு. வைக்கின் பிள்ளை இருதயராஜா தெரிவித்தார்.

இன்று- 6 ஆம் திகதி திங்கட்கிழமை பிற்பகல்- 3 மணியளவில் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் இதுதொடர்பில்  மேலும் தெரிவிக்கையில்

மாற்றுத் திறனாளிகளுக்குப்  பொருத்தமான விளையாட்டுப்  போட்டிகள் தேர்வு இடம்பெறும்.  விளையாட்டு அலுவலகர்கள் , மருத்துவர்களின் வழிகாட்டுதலில் போட்டிகள் தேர்வு செய்யப்படும். அவ்வாறான போட்டிகளுக்கு போட்டியாளர்களுக்குப்  பயிற்சி வழங்கப்படும்.

வடக்கு கிழக்கில் வாழும் அனைத்து மாற்றுத் திறனாளிகளும் போட்டிகளுக்கு அழைக்கப்படுவர். மாகாண, மாவட்ட விளையாட்டு அலுவலகர்கள் , மருத்துவர்கள் இப்போட்டிகளை மேற்பார்வை செய்வார்கள்.

தமிழ் மாற்றுத்திறனாளிகளையும், தமிழ் மாற்றுத்திறனாளிகளைப்  பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்களையும் ஒருங்கிணைக்கும் முகமாக  ” தமிழ் மாற்றுத் திறனாளிகள் அமைப்பு ” உருவாக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் உயிரிழை , மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் சம்மேளனம் ஆகியவை தமிழ் மாற்றுத் திறனாளிகள் அமைப்பில் இணைகின்றன. தமிழ் மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் அங்கத்தவர்களாக தமிழ் மாற்றுத் திறனாளிகளே இருப்பர். அதன் நிறைவேற்றுக் குழுவிலும் தமிழ் மாற்றுத் திறனாளிகளே இருப்பர்.

எம் முன்  உள்ள சவால்கள்.

எமக்கு முன் உள்ள மிகப்பெரும் சவால் – நிதி. இந்த விளையாட்டுப் போட்டியை நடாத்த நாம் நிதி சேகரிக்க உள்ளோம்.

எமது முயற்சியை எம் உறவுகள் நிச்சயம் வரவேற்பார்கள் என்பதில் எமக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை. இதுவரை எம்மை ஊக்கப்படுத்தியவர்கள் எமது புதிய முயற்சியையும் ஊக்கப்படுத்துவார்கள் என நாம் திடமாக நம்புகின்றோம்

அடுத்த சவால்  மாற்றுத்திறனாளிகளை ஊக்கப்படுத்தி அவர்களை வெளிக்கொணர்தல், அவர்களுக்கான போக்குவரத்து என்பன முக்கியமான பிரச்சினைகளாக இருக்கும்

நாங்கள் இவ்வாறான பல போட்டிகளில் முன்னர் பங்கேற்றிருக்கின்றோம். அதேபோல நாம் கட‌ந்த வருடம் ஒரு விளையாட்டுப்போட்டியை ஏற்பாடு செய்தோம் . அதில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோர் மட்டும் கலந்து கொண்டனர். சக்கர நாற்காலி  மரதன் ஓட்டம் , சக்கர நாற்காலிக்  கூடைப்பந்துப்  போட்டிகள் நடத்தினோம்.

இம்முறை நாம் அனைவரும் பங்கு கொள்ளும் விதமாக ஓர் விளையாட்டுப்  போட்டியை ஏற்பாடு செய்கின்றோம்.

ஆரம்பத்தில் தமிழர்களுக்கான விளையாட்டாக நடாத்தப்பட்டு, இனம் காணப்படும் வீரர்கள் தேசிய , சர்வதேச மட்டப்  போட்டிகளில் பங்குபற்ற வழி வகை செய்யும்  நோக்கோடு இந்த முயற்சிகளை எடுக்கின்றோம்.

தமிழ் மாற்றுத் திறனாளிகளுக்கிடையிலான கலைப்  போட்டி

விளையாட்டு  தவிர்ந்த ஏனைய திறமைகளை வெளிப்படுத்த உதவும் போட்டிகள் இனி வரும் காலங்களில் நடாத்தப்படும். குறிப்பாக கலைகளை வழக்கும் போட்டிகள் விரைவில் ஒழுங்கு செய்யப்படும்.

சாதனையாளார் கெளரவிப்பு.

துன்பத்திற்குத்  துன்பம் கொடுங்கள் என டாக்டர்- அப்துல் கலாம் கூறியது போல துன்பம் மிகுந்த வாழ்விலும் அந்த துன்பத்தைத்  தாண்டிச்  சாதனை செய்வோர் இந்த விழாவில் சிறப்பாகக் கெளரவிக்கப்படுவார்கள்.

நாம் இப்போட்டியினை நடாத்துவதன்  மூலம் மாற்றுத்திறனாளிகள் அனைவரையும் இனம் காணப்படுவார்கள். அவர்களது திறமைகள் இனம் காணப்படும். அவர்களது தேவைகள் இனம் காணப்படும்.

மாற்றுத் திறனாளிகள் தொடர்பான ஒரு தகவல் திரட்டு உருவாக்கப்படும். அதன் மூலம் எமக்கு கிடைக்கும் உதவிகள் அனைத்தும் மிகவும் தேவையுள்ள மாற்றுத் திறனாளிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படும்.

இப்போட்டிகள் குறித்தான தகவல்கள்  அனைத்தும்

www.tamilparasports.com எனும் இணையத் தளத்தில் காணக் கிடைக்கும்.

நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர், நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்” எனப்  பாரதி கூறியதைப்போல உங்களால் முடியுமான பங்களிப்பை செய்யவேண்டுமென கேட்டுக்கொள்கின்றோம்

உங்கள் வியாபார ஸ்தாபனங்களின் விளம்பரங்களை இந்தப்  போட்டிகளுக்கு தாருங்கள் . ஒவ்வொரு போட்டிகளுக்கும் நீங்கள் அனுசரனை வழங்கவேண்டுமென நாம் கேட்டுக் கொள்கின்றோம்.

அதேவேளை நிதி தரக்கூடிய வழி வகைகள் அனைத்தும் எமது உத்தியோக பூர்வ இணையத்தில் காணலாம்.

நாங்கள் திரட்டும் பணம் இந்த விளையாட்டு போட்டிகளுக்குப்  பயன்படுத்தப்படும். அத்தோடு மாற்றுத் திறனாளிகளை நிர்வாக ரீதியில் வளர்ப்பதற்கும்  பயன்படுத்தப்படும். மீதமான பணம் அனைத்தும் மாற்றுத் திறனாளிகளுக்கு பின்வரும் வரிசையில் பயன்படுத்தப்படும்

சிறுதுளித் திட்டம் :- முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மாதம் ரூபா  10,000 கொடுப்பனவு திட்டத்துக்குப்  பயன்படுத்தப்படும்.

நம்பிக்கைத்  திட்டம் :- ஒன்றுக்கு மேற்பட்ட அங்கப்பதிப்புக்கு உட்பட்டவர்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவாக ரூ 5000.00

பராமரிப்புத்  திட்டம் :- அங்கம் பாதிக்கப்பட்ட சிறார்கள் பராமரிப்பும் , பெற்றோரை இழந்த சிறார்கள் பராமரிப்புக்குமாகப்  பயன்படுத்தப்படும்.

பல்கலைக் கழகத்திற்குத் தேர்வாகிக்  கல்வி கற்கும் தமிழ் மாற்றுத் திறனாளிகளின் சாதனையை ஊக்குவிக்க அவர்களுக்கு மாதாந்தக்  கொடுப்பனவுகள் வழங்கப்படும் என்றார்.

Related posts: