மாணவியை கடத்தியவர்களுக்கு விளக்கமறியல்!
Thursday, August 18th, 2016
கடந்த திங்கட்கிழமை மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த யுவதி கடத்தல் தொடர்பான பிரதான சந்தேக நபர் உட்பட நான்கு பேரை எதிர்வரும் 29ஆம் திகதி வரையில் விளக்கறியலில் வைக்க களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது –
வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பலவத்தையில் பல்கலைக்கழக யுவதி ஒருவர் வானில் வந்தோரினால் கடத்திசெல்லப்பட்டுள்ளார். இது தொடர்பில் வெல்லாவெளி பொலிஸாருக்கு உடனடியாக தெரியப்படுத்தப்பட்ட நிலையில் அது தொடர்பில் ஏனைய பொலிஸ் நிலையங்களுக்கு தகவல்கள் வழங்கப்பட்டது.
குறித்த வான் கொக்கட்டிச்சோலை பகுதியில் வைத்து பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட நிலையில் வானில் பயணம்செய்த மூவரும் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
கைதுசெய்யப்பட்டவர்களும் கைப்பற்றப்பட்ட வானும் வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் சந்தேக நபர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் வானில் கடத்தப்பட்டு காணாமல்போன யுவதியையும் பிரதான சந்தேக நபரையும் தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில் யுவதியுடன் குறித்த நபர் வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
கைதுசெய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் நேற்று மாலை களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதுடன் குறித்த மாணவியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் பணித்துள்ளார். கைதுசெய்யப்பட்டவர்கள் அம்பாறை மாவட்டத்தின் சேனைக்குடியிருப்பு மற்றும் கல்முனை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
Related posts:
|
|
|


