மலையக தொழிற்சங்கங்களால் கூட்டு ஒப்பந்த நகல் நிராகரிப்பு!

Friday, October 14th, 2016

தோட்டத் தொழிலாளர்களுக்குச் சம்பள உயர்வு வழங்குவதற்காக முதலாளிமார் சம்மேளனம் தயாரித்து அனுப்பிய புதிய ஒப்பந்த நகல் வரைவைத் தொழிற்சங்கங்கள் நிராகரித்துள்ளன.

இதனால், இன்று (14) கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடுவதில் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஆறு நாள் வேலை வழங்க இணங்காவிட்டாலோ அல்லது பிரதான உடன்படிக்கையில் மாற்றங்களைச் செய்ய முனைந்தாலோ, இன்று உடன்படிக்கையில் கைச்சாத்திடப் போவதில்லை என்று நேற்று (13) சங்கங்கள் முதலாளிமார் சம்மேளனத்திற்கு அறிவித்திருந்தன.

வருடத்தில் 300 நாள் வேலை வழங்குவது உள்ளிட்ட முக்கிய விடயங்கள் அடங்கிய பிரதான உடன்படிக்கையை ரத்துச் செய்துவிட்டு, அதற்குப் பதிலாக 250 நாள் வேலை வழங்குவதென்ற உடன்பாட்டையும் சம்பள உயர்வு தொடர்பான உடன்படிக்கையில் உள்ளடக்கி புதிய ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதற்கு முதலாளிமார் சம்மேளனம் யோசனை முன்வைத்திருக்கின்றது.

அவ்வாறு பிரதான உடன்படிக்கை ரத்துச்செய்யப்படுமானால், தொழிலாளர்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இதுவிடயமாக, உடன்படிக்கையில் கைச்சாத்திடும் சங்கங்கள் நேற்று முன்தினமும் நேற்றும் கூடி தீவிரமாக ஆலோசனை நடத்தியதன் பின்னர், உடன்படிக்கை நகல் வரைவை நிராகரிக்கத் தீர்மானித்ததாக, தோட்டத் தொழிற்சங்கக் கூட்டுக் கமிட்டியின் செயலாளர் நாயகம் எஸ்.இராமநாதன் தினகரனுக்குத் தெரிவித்தார்.

தொழிலாளர்களின் நாட்சம்பளத்தை 730 ரூபாய்க்கு உயர்த்துவதற்கு இணக்கம் தெரிவித்திருக்கும் தோட்ட முகாமைத்துவ கம்பனிகள் (முதலாளிமார் சம்மேளனம்), வாரத்தில் மூன்று நாட்கள் வேலை வழங்க முடியும் என்று தெரிவித்திருந்தன. இதனை ஏற்க மறுத்த சங்கங்கள் வாரத்தில் ஆறு நாட்கள் வேலை வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தன.

சங்கங்களின் இந்தக் கோரிக்கைக்கு ஏற்ப உடன்படிக்கையைக் கைச்சாத்திடுமாறு தொழில் அமைச்சரும் தெரிவித்திருந்தார். அதற்கிணங்க இன்றைய தினம் (14) உடன்படிக்கை புதுப்பித்துக் கைச்சாத்திடப்படும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், சம்மேளனம் அனுப்பியிருந்த புதிய உடன்படிக்கையின் நகல் வரைவை ஆராய்ந்தபோது, அதில் 300 நாள் வேலைக்குப் பதில், 250 நாட்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாக இராமநாதன் தெரிவித்தார். அதாவது, 2003 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்டுள்ள பிரதான உடன்படிக்கையின் -(சம்பள உயர்வுக்குப் புறம்பான உடன்படிக்கை) 8,9 சரத்துகளில், வருடத்தில் 300 நாள் வேலை உள்ளிட்ட சேம நலன்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. அந்த உடன்படிக்கை அவ்வாறு இருக்கவே சம்பள உயர்வுக்கான உடன்படிக்கை புறம்பாக இதுவரை கைச்சாத்திடப்பட்டு வந்தது.

அந்தப் பிரதான உடன்படிக்கையின் 8ஆம் 9ஆம் சரத்துகளை நீக்கிவிட்டுச் சில விடயங்களைப் புதிய உடன்படிக்கையில் உள்ளடக்க சம்மேளனம் யோசனை தெரிவித்திருக்கிறது.

அவ்வாறு செய்யப்பட்டால், தொழிலாளர்களுக்குரிய ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியம், விடுமுறை கொடுப்பனவு, ஊக்குவிப்பு கொடுப்பனவு, பிரசவகால சகாய நிதியம் ஆகியவற்றிலிருந்து தொழிலாளர்கள் விலக்களிக்கப்படும் நிலை உருவாகும். இது பாரதூரமான விடயம். எனவே, இதற்கு உடன்பட முடியாது எனும் சங்கங்களின் நிலைப்பாடு நேற்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இராமநாதன் தெரிவித்தார்.

இன்றைய தினம் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாவிட்டால், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சங்கங்கள் தீர்மானிக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

சம்மேளனத்தினர் 730 ரூபாய் சம்பள உயர்வுக்கு இணக்கம் தெரிவித்துவிட்டு, வேலை வழங்கும் நாட்களைக் குறைத்து, உற்பத்தியினை அடிப்படையாகக் கொண்ட ஓர் உயர்வினை வழங்குவதாகக்கூறி, மீண்டும் ஆரம்ப நிலைக்குச் சென்றிருப்பது வருத்தமளிப்பதாகவும் சங்கங்கள் தெரிவித்துள்ளன

58col5181750153_4883500_13102016_kaa_cmy

Related posts: