மலேஷியாவுக்கான இலங்கைத் தூதுவர் மீது  தாக்குதல்!

Monday, September 5th, 2016

மலேஷியாவிலுள்ள இலங்கை தூதுவர் மற்றும் இரண்டாம் நிலை செயலாளர் மீது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவொன்றினால் கோலாலம்பூரில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்சவுடன் மலேஷியாவிற்கு சென்றிருந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தனவை வழி அனுப்புவதற்காக கோலாலம்பூர் விமான நிலையத்திற்கு சென்ற நிலையில் இருவர் மீதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குறித்த குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புலிகளின் அனுதாபிகளே இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜோன்சன் பெர்ணாண்டோ கூறியுள்ளார். தலையில் காயமடைந்த இலங்கை தூதுவர் மற்றும் இரண்டாம் நிலை செயலாளர் ஆகியோர் கோலாலம்பூரிலுள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எங்கே என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இலங்கை தூதுவரிடம் வினவியதாகவும் அது குறித்து பொலிஸாரை தொடர்புகொண்டு அறியுமாறு தூதுவர் அவர்களிடம் கூறியதாகவும் ஜோன்சன் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

தூதுவரின் பதிலால் எரிச்சல் அடைந்த ஆர்ப்பாட்டகாரர்கள் தூதுவரின் நெற்றிப் பகுதியில் இருந்து இரத்தம் பெருக்கெடுக்கும் வரை கடுமையாக தாக்கியுள்ளனர். சம்பவ இடத்திற்கு பொலிஸார் வருகை தருவதற்கு முன்னர் தூதுவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக முன்னாள் அமைச்சர் ஜோன்சன் பெர்ணாண்டோ குறிப்பிட்டார்.

மஹிந்த ராஜபக்சவுடன் மலேஷியாவிற்கு சென்ற பிரதிநிதிகள் குழுவிலுள்ள எவரும் தாக்குதல்களுக்கு இலக்காகவில்லை என அவர் மேலும் சுட்டிக்காட்டினார். முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் உதித் லொக்குபண்டார, முன்னாள் அமைச்சர் ஜோன்சன் பெர்ணாண்டோ மற்றும் முன்னாள் மேல் மாகாண அமைச்சர் உப்பாலி கொடிகார உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு இன்று தினம் நாடு திரும்பவுள்ளது.

70

Related posts: