மனித உரிமை ஆணைக்குழுவில் ஆவா குழு சார்பில் முறைப்பாடு!

Monday, November 14th, 2016

ஆவா குழு உறுப்பினர்கள் என்று குற்றம் சுமத்தி பொலிஸ் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் 11 இளைஞர்களை சட்டவிரோதமாக கைது செய்துள்ளதாக கூறி அவர்களின் உறவினர்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.

ஆவா குழு என்பது கொள்ளை குழு என பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், தமது உறவினர்கள் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவின் தலைமையகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமை சட்டவிரோதமானது என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக கிடைத்துள்ள 11 முறைப்பாடுகள் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்ப்பாண மாவட்ட விசாரணை அதிகாரி தங்கவேல் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் நபர்களை கைது செய்து, தடுத்து வைக்கும் போது மனித உரிமை ஆணைக்குழு முன்வைத்துள்ள விதிமுறைகளுக்கு அமைய பொலிஸ் அதிகாரிகள் செயற்பட்டுள்ளனரா என்பதை ஆராய்ந்து பார்க்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ள 11 பேரில் மூன்று பேரை கைது செய்யும் போது அவர்களின் உறவினர்களுக்கு அறிவிக்கவோ, கைது ஆணையை வெளியிடவோ இல்லை என மனித உரிமை ஆணைக்குழுவின் குறித்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டவர்கள் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதால், யாழ்ப்பாண அலுவலகத்தின் அதிகாரிகள் இதில் நேரடியாக தலையிடும் வாய்ப்பு குறைவு எனவும் கொழும்பில் உள்ள அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பை மேற்கொண்டு விசாரணைகளை நடத்தி வருவதாகவும் கனகராஜ் மேலும் தெரிவித்துள்ளார்.

complaint-1

Related posts: