பொலிஸ் வாகனம் இல்லாதுவிடின் பொதுவாகனம் பயன்படுத்தலாம்  – பிரதிப் பொலிஸ்மா அதிபர்!

Thursday, September 15th, 2016

முக்கியமான நேரங்களில் பொலிஸ் வாகனங்களைத் தவிர்த்து, பிற வாகனங்களிலும் சென்று, சந்தேகநபர்களைக் கைது செய்ய முடியும் என்று, பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

பொலிஸ் நிலையத்தில் உள்ள வாகனங்கள் வேறு தேவைகளுக்காக வெளியில் சென்றிருந்தால், கைது செய்யும் நடவடிக்கைகளுக்காக, தனியார் வாகனங்களையும் பொலிஸார் பயன்படுத்தலாம் என்றும் அவர் கூறினார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில், நேற்றுப் புதன்கிழமை (14) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள், சந்தேகநபர்களை கைதுசெய்யச் செல்கையில், பொலிஸ் வாகனங்களை பயன்படுத்தாமல், வேறு வாகனங்கள் பயன்படுத்தப் படுவதாக பரவலான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவ்வாறு செய்யமுடியுமா என்று வினவியபோதே பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்து பதிலளித்து கருத்து தெரிவிக்கையில், பொலிஸ் வாகனங்களைக் காணும் போது, சந்தேகநபர்கள் தப்பியோடி ஒழிந்துவிடக்கூடும். அதனாலும், பிற வாகனங்கள் பயன்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும், கைதுசெய்ய செல்லும் போது தாம் பொலிஸார் என்று தெரிவித்து அடையாள அட்டையைக் காணப்பிக்க வேண்டும். அதன் பின்னரே கைதுசெய்ய முடியும் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, யாழ்ப்பாண நீதிமன்றத்தில், செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வழக்கு விசாரணையில், ஆஜராகிவிட்டு வெளியில் வரும்போது வெள்ளை வானில் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் மூவரும் கைது செய்யப்பட்டு, யாழ். பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என்று, யாழ். பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவித்தன.

புங்குடுதீவு மாணவியான வித்தியாவின் படுகொலைச் சம்பவத்தின் பின்னர், யாழ். நீதிமன்ற கட்டடத் தொகுதி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பான வழக்கு,  யாழ். நீதிமன்றில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. நீதிமன்றக் கட்டடத் தொகுதியின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டவர்களில் 74 பேரில் மூவரே, வெள்ளைவானில் ஏற்றிச் செல்லப்பட்டனர்.

அஜந்தன், அகிலன் மற்றும் கேதீஸ்வரன் ஆகிய மூவரும், கடத்தப்படவில்லை என்றும்  கொழும்பிலிருந்து வருகைதந்திருந்த குற்றத்தடுப்புப் பிரிவினரே பொலிஸ் சீருடை மற்றும் சிவில் உடைகளில் நின்றிருந்து அவர்களைக் கைது செய்ததாக, யாழ். பொலிஸ் நிலைய அதிகாரிகள், நேற்றுப் புதன்கிழமை தெரிவித்தனர்.

அவ்வாறு கைது செய்யப்பட்ட மூவரும், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும், உரிய விசாரணைகளின் பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்

அவ்வதிகாரிகள் தெரிவித்தனர், நீதிமன்றம் மீதான தாக்குதல் மாத்திரமன்றி, வாகனங்களைச் சேதப்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டும், இவர்கள் மூவர் மீது சுமத்தப்பட்டுள்ளதென பொலிஸ் நிலையத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

police-logo_newsfirst

Related posts: