பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது – பெண்களை சட்ட ரீதியில் வலுவூட்ட தனியான ஆணைக்குழு – கிளிநொச்சியில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Saturday, May 25th, 2024

பெண்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக அரசாங்கம் பல விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, சட்டத்தின் மூலம் பெண்களை வலுவூட்டத் தேவையான நிபந்தனைகளை நடைமுறைப்படுத்த தனியான ஆணைக்குழு நியமிக்கப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் சுகாதார வசதிகளை மேம்படுத்தும் அரசாங்க வேலைத்திட்டத்தின் கீழ், நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியில் 5,320 மில்லியன் ரூபா செலவில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட சிறந்த மகளிர் சுகாதார நிலையம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று (25) முற்பகல் திறந்து வைக்கப்பட்டது . இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த ஜூன் மாத இறுதிக்குள் ஆண், பெண் சமூகத்தன்மை  சட்டமூலம் நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, இதற்கு பாராளுமன்றத்தில் எவரும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது:

இது 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டாலும், கொரோனா தொற்று மற்றும் பொருளாதாரப் பிரச்சனைகள் காரணமாக மகளிர் சுகாதார சேவைகளுக்கான இந்த சிறப்பு மையத்தின் பணிகளை முடிக்க முடியவில்லை. ஆனால் இன்று அதை வெற்றிகரமாக முடித்து பெண்களுக்கு வழங்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன். இன்று கிளிநொச்சி நகரில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மாங்குளம் பிரதேசத்தில் முதலீட்டு வலயத்தை உருவாக்கி இந்தப் பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய திட்டமிட்டுள்ளோம்.

நம் நாட்டில் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்க எந்தச் சட்டமும் இருக்கவில்லை. அரசியல் யாப்பில் உள்ள அடிப்படை உரிமைகள் மாத்திரமே இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே, பெண்களுக்கான இரண்டு புதிய சட்ட மூலங்களை தற்போது பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளோம்.

பெண்களை வலுவூட்டும் சட்டத்தின் கீழ், சட்டத்தின் மூலம் பெண்களை வலுவூட்டத் தேவையான நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. மேலும், அந்த நிபந்தனைகளை அமுல்படுத்த தனியான ஆணைக்குழு நியமிக்கப்படும். மேலும், இந்த ஜூன் மாத இறுதிக்குள் ஆண், பெண் சமூகத்தன்மை  சட்ட மூலத்தை நிறைவேற்ற எதிர்பார்க்கிறோம். இந்த வரைவு தற்போது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். யாரும் அதற்கு எதிராக இருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை.

பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். அதற்கேற்ப பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிரான சட்டத்தை நடைமுறைப்படுத்த வாய்ப்புக் கிடைத்துள்ளது. பணியிடங்களில் பதவி உயர்வு மற்றும் இடமாற்றம் தொடர்பாக பெண்களுக்கு சம உரிமை இருக்க வேண்டும்.

பெண்களின் உரிமைகள் சட்டப்பூர்வமாக்கப்பட வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம், அதற்கேற்ப அந்த சட்டத்தின் கீழ் நாங்கள் பணியாற்ற முடியும். மேலும், வீட்டில் இருக்கும் பெண்ணின் பாதுகாப்பையும் கவனிக்க வேண்டும். இந்த பெண்கள் உரிமை சட்ட மூலங்கள் ஏற்கனவே இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. அந்த சட்ட மூலங்களை அனைவரும் படித்துப்பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். பெண்களின் உரிமைகள் குறித்து அவர்களுக்குக் கற்பிப்பதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றையும் நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கின்றோம் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: