பிரமிட்’ பண மோசடியை கட்டுப்படுத்த விசேடதிட்டம்!

Friday, August 5th, 2016

பாரிய அளவில் நாடுபூராவும் முன்னெடுக்கப்பட்டுவரும் பிரமிட் முறை பண மோசடியை முழுமையாக கட்டுப்படுத்துவதற்காக மத்திய வங்கி, நிதி அமைச்சு, சட்ட மா அதிபர் திணைக்கள மற்றும் பொலிஸார் இணைந்து பாரிய சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன..

கொழும்பு, இரத்தினபுரி, கம்பஹா, நீர்கொழும்பு, குருநாகல், தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களின் அநேக பிரதேசங்களில் இந்த பிரமிட் முறை பாரிய அளவில் முன்னெடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளதுடன் அவர்கள் பல்வேறு பெயர்களில் செயற்பட்டு வருவதாகவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளதோடு மத்திய வங்கி அதற்கமைய சகல பொலிஸ் பிரிவுகளையும் இணைத்து தேடுதல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பொது மக்களை ஏமாற்றி அவர்களுக்கு பல்வேறு இலாபங்களை பெற்றுத்தருவதாக கூறி பிரமிட் முறை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. நாடு பூராவும் பல இலட்சம் பேர் பிரமிட் முறையில் சிக்கி ஏமாந்து வருவதாக அறிய வருகிறது. பிரமிட் முறை மூலம் அங்கத்தவர்களை இணைத்து அது குறித்து பிரசாரங்களை முன்னெடுக்கும் நபர்களுக்கு 20 இலட்சம் ரூபா அபராதமும் 5 வருட கடூழிய சிறைத் தண்டனையும் வழங்க முடியும். இது தவிர சட்ட விரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழும் இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும் என மத்திய வங்கி தெரிவித்தது.

பிரமிட் முறையை ஆரம்பித்து அது குறித்து பிரசாரம் செய்து வரும் நபர்களை தேடி புலனாய்வு பிரிவு விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.

Related posts: