பண மோசடியில் சமுர்த்திக் கடன் வசூலிப்பு உத்தியோகத்தர்கள்?

Wednesday, November 15th, 2017

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இரண்டு இடங்களில் சமுர்த்திக் கடன் வசூலிப்பு உத்தியோகத்தர்கள் பணமோசடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டை விசாரித்து நடவடிக்கைகள் எடுப்பதற்கு கணக்குப் பரிசோதனைக் குழு அனுப்பப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்டச் செயலக சமுர்த்தி வட்டாரங்கள் தெரிவித்தன.

இது பற்றி மேலும் தெரிவிக்கப்பட்டதாவது;

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தெல்லிப்பழைப் பகுதியில் உள்ள சமுர்த்திப் பண வசூலிப்பு உத்தியோகத்தர் பணமோசடியில் ஈடுபட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டது. தெல்லிப்பழைப் பகுதியில் குழுக்கடன் மற்றும் தனிநபர் கடனை வசூல் செய்யும் சமுர்த்தி உத்தியோகத்தர் அந்தப் பகுதியில் உள்ள மக்கள் பெற்றுக் கொண்ட கடன் தொகையின் மாதப் பணத்தினை பெறுவதற்குச் சென்றுள்ளார். பணத்தை வாங்கிய பின்னர் அவர்களுக்கான பற்றுச் சீட்டை வழங்காமல் வந்துள்ளார். அத்துடன் நிறுவனத்திலும் அவர் பணத்தை ஒப்படைக்கவில்லை. இந்த நிலையில் சமுர்த்தி வங்கியால் பெற்ற கடன்களைச் செலுத்துமாறு குறித்த மக்களுக்கு அறிவிக்கப்பட்டது. இதன் போது குறித்த மக்கள் தாம் பணம் செலுத்தியதைத் தெரியப்படுத்தியுள்ளார்கள்.

இதன் பின்னர் சமுர்த்தி முகாமையாளர் கடன் வசூலிக்கும் உத்தியோகத்தரை அழைத்து குறித்த நபர்கள் மாதாந்த கடன் தொகையை செலுத்தியள்ளார்கள். ஆனால் இன்னமும் வங்கியில் அது பற்றிய விபரங்கள் பூர்த்தி செய்யப்படவில்லையே என்று வினவிய போது குறித்த கடன் வசூலிப்பு உத்தியோகத்தரால் 50 ஆயிரம் ரூபா வரையில் மோசடி செய்யப்பட்டது கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. விசாரணைகளின் பின்னர் உத்தியோகத்தர் மோசடி செய்த பணத்தை மீள வழங்கியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்ற சம்பவம் ஊர்காவற்றுறை ஜே/56 சமுர்த்திப் பிரிவிலும் நடைபெற்றுள்ளது. இது தொடர்பில் பிரதேச செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்துடன் மாவட்டச் செயலகத்தின் கணக்காய்வுப் பிரிவும் குறித்த சம்பவம் தொடர்பில் மதிப்பீடுகளைப்பெறுவதற்கு நடவடிக்கைகள் எடுத்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

Related posts: