நோயாளிகள் பாதிக்கப்படுவதை ஏற்க முடியாது – நீதிக்கான மக்களின் குரல்!

Monday, May 30th, 2016

அப்பாவி நோயாளிகள் பாதிக்கப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என நீதிக்கான மக்களின் குரல் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

அரசாங்கத்திற்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கும் இடையிலான முரண்பாடுகள் அப்பாவி நோயாளிகளை பாதிக்கக் கூடாது என அந்த அமைப்பு ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

மேலும், அந்த அமைப்பு சுட்டிக் காட்டுகையில்,

வைத்தியர் நியமனங்கள் தொடர்பில் அரசாங்கத்திற்கும் வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கும் இடையில் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த பட்டியலில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் இதனால் நாடு தழுவிய ரீதியில் பணிப் புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாகவும் வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அனர்த்தம் இடம்பெற்ற பகுதிகளில் போராட்டம் நடத்தப்படாது என சங்கம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பில் ஓரளவு நியாயம் உண்டு என்றே கருதுகின்றோம். வைத்திய சங்கத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான முரண்பாடு அரசியல் ரீதியான கோணத்தில் நகர்கின்றது.

வைத்தியர்கள், பொறியியலாளர்கள், கணனிப் பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள் உள்ளிட்ட நாட்டின் முக்கிய புத்தி ஜீவிகளில் பலர் இலவசக் கல்வியின் மூலம் கல்வித் தகமை பெற்றுக்கொண்டவர்களாவர்.

அவர்களும் மனிதர்களே, அவர்களுக்கு தனிப்பட்ட வாழ்க்கை உண்டு. தொழில் செய்வதனைப் போன்றே நியாயமான முறையில் பணம் சம்பாதிப்பதும் அவர்களின் உரிமையாகும்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் விவகாரத்தில் அரசாங்கம் கடுமையான நிலைப்பாட்டை பின்பற்றியதாகவே கருதுகின்றோம்.

எனவே, இந்த விடயத்தில் அரசாங்கம் நெகிழ்வுப் போக்குடன் செயற்பட வேண்டியது மிகவும் அவசியமானது நீதிக்கான மக்களின் குரல் அமைப்பு ஊடக அறிக்கையின் மூலம் வலியுறுத்தியுள்ளது.

Related posts: