நெற்செய்கையில் ஈடுபடாதவர்களுக்கு இம்முறை மானியக்கொடுப்பனவு இல்லை – தேசிய உரச்செயலகத்தின் மட்டக்களப்பு உதவிப்பணிப்பாளர்!

Wednesday, March 15th, 2017

கடந்த போகத்தில் உரத்துக்கான மானியக் கொடுப்பனவு பெற்று நெற்செய்கையில் ஈடுபடாதவர்களுக்கு இம்முறை மானியக் கொடுப்பனவு வழங்கப்படமாட்டாது என்று தேசிய உரச்செயலகத்தின் மட்டக்களப்பு உதவிப்பணிப்பாளர் கே.எல்.எம்.சிராஜுன் தெரிவித்துள்ளார்.

கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நேற்று நடைபெற்ற சிறுபோக ஆரம்பக்கூட்டத்தில் தமது திணைக்களத்தின் செயற்பாடுகள் குறித்துக் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த தேசிய உரச்செயலகத்தின் மாவட்ட உதவிப்பணிப்பாளர்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த போகத்தில் 36500 விவசாயிகளுக்கு 55கோடியே 33ஆயிரம் ரூபாய் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. சென்ற போகத்துக்கான உர மானியக் கொடுப்பனவு இதுவரையில் சிலருக்கு கிடைக்காமலிருக்கலாம். இதற்கு காரணம் அவர்களுடைய வங்கிக்கணக்குகளில் தவறுகள் ஏற்பட்டிருக்கக்கூடும் என்று குறிப்பிட்டார்.

தற்போது அவ்வாறான பிழைகள் சரி செய்யப்பட்டு அங்தக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார். இந்த போகத்தில் அவ்வாறான பிழைகள் ஏற்படாதவாறு விவசாயிகள் கவனத்துடன் செயற்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

எதிர்வரும் போகத்தில் விவசாய நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ள இந்த நேரத்தில் குறிப்பிட்ட காலத்துக்குள் தவறுகளைத் தவிர்த்து விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கின்ற போது உரத்துக்கான மானியக் கொடுப்பனவுகள் விரைவாக வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

கொடுப்பனவுகள் கால தாமதம் காரணமாக விவசாய நடவடிக்கைகளிலும் பல பிரச்சினைகள் ஏற்படுவதாக விவசாயிகள் குறிப்பிட்டனர்.

உர மானியக் கொடுப்பனவானது வறிய நிலையில் உள்ள விவசாயிகளின் விவசாய முன்னேற்றத்துக்காக ஒருவருக்கு ஒரு ஏக்கருக்கு 5ஆயிரம் ரூபா வீதம் 5 ஏக்கருக்கு வழங்கப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.

Related posts: