கடனை திருப்பிச் செலுத்த இலங்கைக்கு அவகாசம் – இந்திய தூதரகம் அறிவிப்பு!

Saturday, April 23rd, 2022

பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கைக்கு உதவும் வகையில், இலங்கை கடனாகப் பெற்ற 40 கோடி டொலா் அதாவது ரூ.3,000 கோடி தொகையை திருப்பிச் செலுத்துவதற்கான அவகாசத்தை இந்தியா நீட்டித்துள்ளது.

இதுகுறித்து கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

இலங்கைக்கு பல்வேறு வழிகளில் இந்தியா உதவி செய்வது தொடா்கிறது. இலங்கை அரசுக்கு அந்த நாட்டு மத்திய வங்கி மூலமாக இந்திய ரிசா்வ் வங்கி 40 கோடி டொலா் கடனுதவி அளித்துள்ளது.

அந்தக் கடன் தொகையை கரன்சி பரிமாற்ற முறையில் இலங்கை அரசு திருப்பிச் செலுத்துவதற்கு அளிக்கப்பட்டிருந்த அவகாசம் கடந்த ஜனவரி மாதத்துடன் முடிந்துவிட்டது.

இந்நிலையில், இலங்கை அரசு கடன் தொகையைத் திருப்பிச் செலுத்துவதற்கான அவகாசத்தை இந்திய ரிசா்வ் வங்கி நீட்டித்துள்ளது என்று அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்தியாவுக்கு கடன் தவணையைத் திருப்பிச் செலுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசு கடந்த 12 ஆம் திகதி அறிவித்தது. IMF மூலமாக நிதியுதவி கிடைக்கும் வரை கடன் தவணை நிறுத்தி வைப்புத் தொடரும் என்றும் இலங்கை அரசு கூறியது.

இந்த அறிவிப்பு வெளியான பிறகு, சா்வதேச அளவில் கடன் தவணையைத் திருப்பிச் செலுத்த இந்தியா அவகாசம் அளித்திருப்பது இதுவேமுதல் முறையாகும்.

இலங்கை மத்திய வங்கியுடன் ‘சார்க்’ கரன்சி பரிமாற்றத் திட்டத்தின் கீழ் இந்திய ரிசா்வ் வங்கி ஒப்பந்தம் மேற்கொண்டது. அந்த ஒப்பந்தத்தின்படி, இந்திய ரிசா்வ் வங்கியிடம் அதிகபட்சமாக 40 கோடி டொலா் தொகையை, டொலா் அல்லது யூரோ அல்லது ரூபாய் மதிப்பில் பல தவணைகளில் இலங்கை மத்திய வங்கி கடனாகப் பெற முடியும்.

இதுதவிர, இந்தியாவிடம் இருந்து அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற்காக இலங்கை அரசு 100 கோடி டொலா் கடன் பெற்றுள்ளது. பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் வாங்குவதற்காக 50 கோடி மொலரும் இலங்கை கடன் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: