நுண்நிதி நிறுவன கடன் சுமை: தவறான முடிவெடுத்து இளம் தாய் உயிர்மாய்ப்பு!

Thursday, April 26th, 2018

தவறான முடிவெடுத்து நஞ்சருந்திய குடும்பப் பெண் ஒருவர் இரண்டு நாள்களின் பின்னர் நேற்று உயிரிழந்தார். நுண்நிதி நிறுவனங்களில் பெற்ற கடனுக்காக தவணைப் பணத்தைச் செலுத்த முடியாமலே அவர் உயிரை மாய்த்தார் என்று பெண்ணின் தந்தை தெரிவித்துள்ளார்.

வவுனியா மறவன்குளம் கிராமத்தில் வசிக்கும் சக்திவேல் சசிகலா (வயது 22) என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்தார். கடந்த 23 ஆம் திகதி இரவு 9 மணியளவில் தவறான முடிவெடுத்து தனது வீட்டில் நஞ்சருந்திய நிலையில் அவரது சகோதரனால் மீட்கப்பட்டு உடனடியாக வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பயனின்றி நேற்று அதிகாலை அவர் உயிரிழந்தார் என்று மருத்துவர்கள் அறிவித்தனர். குறித்த பெண் கணவரைப் பிரிந்த நிலையில் அவரது தந்தையுடன் வசிக்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டது.

எனது மகளான சசிகலா நுண்நிறுவனங்களில் இருந்து கடன்களை பெற்றார். தவணைப் பணத்தைச் செலுத்த முடியாது திண்டாடினார். தவறான முடிவெடுத்த அன்றைய தினம் மாலை 5 மணியளவில் நுண்நிதி நிறுவனம் ஒன்றின் முகவர் தவணைப் பணம் கேட்டு வீட்டுக்கு வந்தார். அவர் எனது மகளை கடுமையான வார்த்தைகளால் திட்டினார். இதனால் மனமுடைந்த நிலையிலேயே சசிகலா நஞ்சருந்தினார் என்று சசிகலாவின் தந்தை தெரிவித்தார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts: