நிதிமோசடிப் பிரிவு கலைக்கப்பட்டால் போராட்டம் வெடிக்கும் – பிரதியமைச்சர் ரஞ்சன்

Tuesday, June 14th, 2016

பொலிஸ் நிதிமோசடிப் பிரிவு கலைக்கப்பட்டால் பொதுமக்களுடன் இணைந்து போராட்டமொன்றை முன்னெடுக்கப்போவதாக பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க எச்சரித்துள்ளார்.

பொலிஸ் நிதிமோசடிப்பிரிவு கலைக்கப்படவுள்ளதாக பரவும் செய்திகள் குறித்து ஊடகமொன்று நேற்று பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிடம் கேள்வி எழுப்பியிருந்தது. அதற்குப் பதிலளிக்கும் வகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள ரஞ்சன்,

இது ஒரு பொய்யான வதந்தியாகும். முன்னாள் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களே இந்த வதந்தியை நாடுமுழுவதும் பரப்பி வருகின்றனர். அவர்களுக்கு பொலிஸ் நிதிமோசடிப் பிரிவை நினைத்து இரவெல்லாம் உறங்க முடியாமல் தவிக்கின்றனர்.

கடந்த காலங்களில் முன்னைய அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் பலர் பொலிஸ் நிதிமோசடிப் பிரிவினால் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளதன் காரணமாக மோசடிகளுடன் தொடர்புடைய ஏனையோருக்கும் அச்சம் தோன்றியுள்ளது.

ஜனாதிபதியும் பிரதமரும் தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளின் பிரகாரமே பொலிஸ் நிதிமோசடிப் பிரிவு உருவாக்கப்பட்டது. அத்துடன் இதற்காக அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு ஏராளமான சேவைகளை இந்தப் பொலிஸ் பிரிவின் மூலம் ஆற்ற முடிந்துள்ளது. மோசடிகளில் ஈடுபட்ட முன்னைய அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் ஆரம்பம் முதல் இதனை எதிர்த்து வந்துள்ளனர்.

ஒருசிலர் இந்தப் பிரிவின் அதிகாரிகள் பழிவாங்கும் போக்கில் நடந்து கொள்வதாக குற்றம் சாட்டினர். இன்னும் சிலர் அவர்களுக்கு கல்லால் எறிய வேண்டும் என்று விமர்சனம் செய்தனர். அவர்களே பொலிஸ் நிதிமோசடிப் பிரிவை மூடப்போவதாக தகவல் ஒன்றைப் பரவவிட்டுள்ளனர்.

ஆனால் எக்காரணம் கொண்டும் இந்த நிதிமோசடிப் பிரிவு மூடப்பட மாட்டாது. அவ்வாறு மூடப்படுவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டால் பொதுமக்களுடன் இணைந்து அதற்கு எதிரான போராட்டம் ஒன்றை மேற்கொள்ளவும் தயங்க மாட்டேன் என்றும் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts: