நாட்டில் தமிழ் மொழியில் திரைப்படங்கள் நாடகங்கள் தயாரிக்கப்படுவது மிகவும் குறைவு – நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்நாயக்க!

Friday, September 9th, 2016

நாட்டில் தமிழ் மொழியில் திரைப்படங்கள் நாடகங்கள் தயாரிக்கப்படுவது மிகவும் குறைந்தளவிலேயே காணப்படுகின்றது என ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்றைய தினம் உரையாற்றிய போது இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

எமது நாட்டில் தமிழ்மொழி ஊடாக திரைப்படங்கள், தொலைக்காட்சி நாடகங்கள், மேடை நாடகங்கள் உருவாவது மிகவும் வரையறுக்கப்பட்ட அளவிலேயே காணப்படுகின்றது.தமிழ் கலை வடிவங்களே இலங்கைத் தமிழர்கள் மத்தியில் பரவலாகக்காணப்படுகின்றன.

தமிழ் நாட்டில் கல்வி மற்றும் கலாச்சார நிலை மிகவும் தாழ்ந்த மட்டத்திலேயே காணப்படுகின்றது.இதனால் தமிழக கலாச்சாரத்தை பின்பற்றவும் தமிழக கலைகளை உள்வாங்கிக்கொள்ளவும் தமிழ் மக்கள் தூண்டப்படுகின்றனர். இந்த விடயம் குறித்து அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

தேசிய தொலைக்காட்சி தர நிர்ணய நிறுவனமொன்றின் அவசியம் எழுந்துள்ளது.வெளிநாட்டு தொலைக்காட்சி நாடகங்களுக்காக அறவீடு செய்யப்படும் வரி மிகவும் குறைந்த மட்டத்தில் காணப்படுகின்றது.மக்கள் மீது வற் வரியை அதிகரிக்கும் அரசாங்கம் வெளிநாட்டு குப்பைகளுக்கான (தரம்குறைந்த கலை படைப்புக்கள்) வரி குறைக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாடாளுமன்றில், கலைஞர்களை ஊக்குவிப்பதற்கு புதிய நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டுமென நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்துள்ளார்.தேசிய இலக்கிய விருது வழங்கும் நிகழ்வுகளில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து அவதானம் செலுத்தப்பட வேண்டும் எனவும் கூறினார்.

மேலும், படைப்பாளிகளை ஊக்குவிப்பதற்கு ஏதேனும் ஓர் அணுகுமுறை பின்பற்றப்பட வேண்டியது அவசியமானதாகும்.விருது வழங்கும் நிகழ்வு ஒன்றில் வெற்றியாளர்களை மட்டும் கௌரவிப்பது பொருத்தமாகாது. ஏனைய படைப்பாளிகளின் ஆக்கத்திறன்களையும் ஊக்குவிக்க வேண்டியது அவசியமானதாகும்.உரிய முறைகளின் அடிப்படையில் கலைஞர்கள் படைப்பாளிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் திலகராஜ் தெரிவித்துள்ளார்.

810403633jvp3

Related posts: