தேவையான அரச அதிகாரிகளை சேவைக்கு அழைத்துக்கொளள  அனுமதி!

Monday, May 29th, 2017

வார விடுமுறை தினமாக இருந்தாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக தேவையான அரச அதிகாரிகளை சேவைக்கு அழைத்துக் கொள்ளுமாறு தலைமை அதிகாரிகளுக்கு அறிவித்தப்பட்டுள்ளது.

இதுவரையில் நிவாரண நடவடிக்கைகள் வெற்றிகரமாக இடம்பெற்ற போதிலும், எந்தவித இடையூறுகளுமின்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரச அதிகாரிகளின் ஆகக்கூடிய பங்களிப்பை பெற்றுக் கொள்வதற்காக அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பல பிரதேசங்களில் வெள்ளம் வடிந்து வருகிறது. இருப்பினும், தாழ்நிலம் மற்றும் ஜின்கங்கை, நில்வளா கங்கை ஆகிய நதிகளின் நீர்மட்டம் மேலும் அதிகரித்து வருகிறது.

இடர்நிலைமை காரணமாக நான்கு இலட்சத்து 40 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. குடும்பங்களின் எண்ணிக்கை 1 இலட்சத்து 14 ஆயிரத்து 124 ஆகும். இன்று மதியம் அளவில் பதிவு செய்யப்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 146 ஆகும். காணாமல் போனோரின் எண்ணிக்கை 112 ஆகும்.

319 நலன்புரி நிலையங்களில் 24 ஆயிரத்து 603 குடும்பங்களுக்கு உட்பட்ட 1 லட்சத்திற்கு மேற்பட்டோர் தங்கியுள்ளனர். 230 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. ஓரளவுக்கு பாதிக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை ஆயிரத்து 701 ஆகும். களுத்துறை மாவட்டத்தில் வீடுகளுக்கு பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அங்கு 47 வீடுகள் முழுமையாகச் சேதமடைந்துள்ளன. ஓரளவுக்கு பாதிக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 759 ஆகும்.

பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் துண்டிக்கப்பட்ட மின்சார விநியோகத்தை விரைவில் வழமை நிலைமைக்கு கொண்டு வருவதற்கு மின்சக்தி மற்றும் நிலைபேறான சக்தி அமைச்சு விசேட வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது.

மின்துண்டிப்பு குறித்து தொலைபேசிகள் மூலம் தொடர்புகொண்டு தகவல்களை வழங்க முடியும். இதற்கான தொலைபேசி இலக்கம் 1987, 1910, 1901 என்பனவாகும்.

பல பிரதேசங்களில் மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்தமையினால் வீதிப் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன. வீதிகளை துப்பரவு செய்யும் பணிகளில் வீதிப் போக்குவரத்து அதிகார சபை ஈடுபட்டுள்ளது.

Related posts: