தெல்லிப்பழை கொல்லங்கலட்டி ஞான வைரவர் ஆலயத்தில் திருட்டு முயற்சி முறியடிப்பு!
Friday, March 25th, 2016
தெல்லிப்பழை கொல்லங்கலட்டி ஞான வைரவர் ஆலயத்தில் நேற்றுப் முன்தினம் (23) மேற்கொள்ளப்பட்ட திருட்டு முயற்சி ஆலயத்திற்கு அண்மையிலுள்ள 50 வயது மதிக்கத்தக்க அடியவரொருவரின் துணிச்சலான செயற்பாட்டால் முறியடிக்கப்பட்டது.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, இரவு-10.30 மணியளவில் ஆலயத்துக்குள் உட்புகுந்த திருடர்கள் வசந்த மண்டபக் கதவையும் ,மடப் பள்ளிக் கதவையும் அலவாங்கால் உடைத்துக் கொண்டிருந்த நிலையில் தற்செயலாக அவ்விடத்திற்கு வந்த மேற்படி அடியவர் நிலைமையை உணர்ந்து ஆலயத்தின் மணியைத் தொடர்ச்சியாக ஓங்கி அடித்துள்ளார். இதனையடுத்துத் திருடர்கள் தமது திருட்டு முயற்சியைக் கைவிட்டு அவ்விடத்திலிருந்து தப்பியோடியுள்ளனர்.
மணிச் சத்தம் கேட்டதையடுத்து ஊரிலுள்ளவர்கள், ஆலயத்தின் நிர்வாகிகள் எனப் பலரும் அவ்விடத்தில் ஒன்று கூடியுள்ளனர் . சம்பவம் தொடர்பில் உடனடியாக காங்கேசன் துறைப் பொலிஸாருக்கு ஆலய நிர்வாகத்தினரால் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் ஆலயத்துக்குச் சென்ற பொலிஸார் திருடர்கள் கைவிட்டுச் சென்ற பொல்லு, அலவாங்கு, மோட்டார் கழற்றுவதற்காகக் கொண்டு வந்த சாவி, ஒருதொகை பணம் என்பவற்றை மீட்டுச் சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
|
|
|


