தென்மராட்சியில் அரச பேருந்துகள் மீது தாக்குதல்!

Monday, June 6th, 2016

தென்மராட்சி பிரதேசத்தின் மூன்று இடங்களில் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகள் மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு தாக்குதல்கள்  மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அடையாளந் தெரியாத நபர்கள் கற்களை வீசி தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது பேருந்தின் சாரதி ஒருவர் காயமடைந்துள்ளதோடு பேருந்தின் கண்ணாடிகளும் சேதமடைந்துள்ளன.

முதலாவது தாக்குதல் கிளிநொச்சி சாலைக்குச் சொந்தமான பேருந்தின் மீது மேற்கொள்ளப்பட்டுள்ளது. வவுனியாவியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி குறித்த பேருந்து பயணித்துக் கொண்டிருந்தபோது நேற்றிரவு 9.30 மணியளவில் கைதடிப் பகுதியில் வடமாகாண சபைக்கு முன்பாக வைத்து இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இரண்டாவது தாக்குதல் வென்னப்புவ போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தின் மீது மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம்   நோக்கி பயணித்த பயணிகள் பேருந்தின் மீதே இந்தத் தாக்குதல் நேற்றிரவு 10 மணியளவில் சாவகச்சேரி சங்கத்தானைப் பிரதேசத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மூன்றாவது தாக்குதல் கம்பஹா போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தின் மீது மேற்கொள்ளப்பட்டுள்ளது. கண்டியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த பேருந்தின் மீது நேற்றிரவு 10.20 அளவில் கைதடி பாலத்தடியில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி  பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Related posts: